Last Updated : 08 Mar, 2023 05:39 PM

 

Published : 08 Mar 2023 05:39 PM
Last Updated : 08 Mar 2023 05:39 PM

அஞ்சலாச்சி, அமுதா, யாஸ்மின், ரேகா... தள்ளுவண்டி தாய்களின் நம்பிக்கைப் பகிர்வுகள் | Women's Day Special

மகளிர் தினத்தில் ‘பெண்கள் சாதித்துவிட்டார்கள், பெண்களுக்காக அங்கீகாரம் கிடைத்துவிட்டது’ என்றெல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தருணத்தில் எல்லாம் சாலையின் ஓரம் தள்ளுவண்டிகளில் தங்கள் அன்றாட வாழ்வாராத்துக்காக உழைக்கும் பெண்களை கடக்கும்போது எப்போதும் ஒரு கேள்வி எழும்... ‘உண்மையில் மகளிர் தினம் கொண்டாட்டத்திற்கு உரியதா?’

எந்தவித பின்புலமும் இல்லாமல் இந்த சமூகத்திலிருந்து தங்களை நோக்கி எறியப்படும் கத்திகளை இப்பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று நீங்கள் நினைத்ததுண்டா? அப்பெண்கள் மட்டுமல்ல, அப்பெண்களின் தள்ளுவண்டிகளும் நமக்கு ஏராளமான கதைகளை வைத்திருக்கின்றன. அக்கதைகள் எல்லாம் உடைத்த கற்களின் எஞ்சி இருக்கும் மாபெரும் நம்பிக்கைகள்.

அஞ்சலாச்சி - “வயது எனக்கு 50 ஆகிட்டு. கண்மூடி திறப்பதற்குள் சென்னை வந்து 50 வருடங்கள் ஓடிவிட்டன. எனக்கு சொந்த ஊர் புதுச்சேரி. இளநீர் விற்பதை தவிர்த்து எனக்கு வேறு தொழில் தெரியாது. நான் படிக்கவும் இல்லைங்க. தொழிலில் முதலில் கணவர் உடனிருந்தார். ஆனால், அவருக்கு வயதாகிவிட்டதால் தற்போது வீட்டில் இருக்கிறார். நான் தான் சரக்கை எடுத்து வருவது விற்பது என அனைத்து வேலைகளையும் செய்கிறேன். தெருவோர கடை வைத்திருப்பதே இங்கு பலருக்கு பிரச்சனைதான்.

இப்பகுதியில் மேயர் பிரியாவின் அலுவலகத்துக்கு பக்கத்தில்தான் என் கடை இருந்தது. 20 வருடமாக அங்குதான் இந்த தள்ளுவண்டியில் இளநீர் விற்று வந்தேன். திடீரென கடந்த வாரம் புதியதாய் வந்த அதிகாரி, இங்கு எல்லாம் கடை வைக்கக் கூடாது என்று கூறி காலி பண்ண சொல்லிவிட்டார். இதனால் அதற்கு நேர் எதிரில் வெயிலில் ஓரமாக கடை வைத்து அமர்ந்திருக்கிறேன். முன்பு இருந்த பகுதியில்தான் எங்கள் தள்ளுவண்டி பிரபலம். என் பிழைப்பே இதுதான். தற்போது அதற்கும் சுணக்கம் எற்பட்டுள்ளது. மீண்டும் அதே இடத்தில் கடை வைக்க அனுமதி அளித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

அஞ்சலாச்சி

இந்த தள்ளுவண்டியை நம்பிதான் வாடகை தருகிறேன், உணவு எல்லாமே... வாழ்கையில் எனக்கென்று பெரிய மகிழ்ச்சி எல்லாம் இருந்ததில்லை. இரு மகள்களை திருமணம் செய்து வைத்துவிட்டேன். இருவருமே நன்கு படித்தவர்கள். அவர்களை வேலைக்கு செல்ல மாப்பிள்ளை வீட்டில் அனுமதிப்பதில்லை. அந்த வருத்தம் எனக்கு உள்ளது. பெண்கள் சொந்தக் காலில் நிற்பது அவசியம். முன்ன என் கடை இருந்த இடத்தில் பெரிய வேப்ப மரம் தெரிகிறது பாருங்க... அது நான் வைத்தது.. அந்த மரத்தை பார்க்கும்போதெல்லாம் எதோ இனம்புரியா மகிழ்ச்சி தோன்றும் அவ்வளவுதான் என் மகிழ்ச்சியின் அனுபவம்.”

அமுதா - “10 வருடங்களாக தள்ளு வண்டியில் பழங்கள் விற்று வருகிறேன். பொன்னேரி தாண்டி என் சொந்த ஊர் உள்ளது. என்னையும் என்மகளையும் எனது கணவர் 10 வருடங்களுக்கு முன்னர் விட்டு சென்றுவிட்டார். அதன்பின்னர் என் மகள்தான் எனக்கு உலகமாக இருந்தாள். அவளும் குடும்பப் பிரச்சினையில் ஒரு வயது மகனை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டாள். நானும் என் பேரனும் யாரும் இல்லாமல் தவித்தோம். அப்போது எனக்கு ஒரே பிடிப்பாய் இருந்தது இந்த கடைதான்.

அரசோ, தொண்டு நிறுவன அமைப்புகளோ யாரும் எனக்கு உதவவில்லை. எல்லாம் இடத்திலும் மனுக்கள் அளித்தேன், ஒரு பயனும் இல்லை. சாலையோரத்தில் கடை வைத்திருப்பதனால் தினமும் நான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறேன். எனக்காக பேச யாரும் இல்லை. நானேதான் என்னை காத்துக் கொள்கிறேன். பெரும் போராட்டத்திற்கு பின்னர் என் உழைப்பினால் தற்போது என் பேரனை சென்னையை தாண்டி வெளியே ஹாஸ்டலில் படிக்க வைக்கிறேன். இதுதான் என் பயணத்தின் வெற்றி.

அமுதா

சாலையோர கடை வைத்திருக்கும் பெண்களுக்கு அவசியமானது சுத்தமான கழிப்பிட வசதி. அந்த வசதியை அரசு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். என்னை பொறுத்தவரை, பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது அது கணவன், அப்பா, மகன் யாராக இருந்தாலும் சரி, பெண்கள் பொருளாதாரத்திற்கு எந்த ஆணையும் சார்ந்திருக்கக் கூடாது. அப்படி நீங்கள் சார்ந்திருந்தால் உங்கள் வாழ்கைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. நன்றாக படித்து சொந்த காலில் நில்லுங்கள். யாரையும் நம்பாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினையா, ஒத்துபோகவில்லை என்றால் பேசிவிட்டு பிரிந்துவிடுங்கள். ஊருக்காக வருத்தத்துடன் வாழாதீர்கள். உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை ஒருமுறைதான், உங்களுக்காக சுதந்திரமாக வாழ்த்துவிட்டுச் செல்லுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள்.”

யாஸ்மின் - “சொந்த ஊர் நாகப்பட்டினம். பிழைப்புக்காக சென்னை வந்து தற்போது சென்னையே சொந்த ஊராகிவிட்டது. 7 வருடங்களாக தள்ளுவண்டியில் சாப்பாடுக் கடை வைத்திருக்கிறேன். வசதியான குடும்பம் கிடையாது. பிள்ளைகளுக்காகத்தான் நானும் என் கணவரும் உழைக்கிறோம். இந்த உழைப்பு ஒருநாள் எங்களுக்கு நிம்மதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண் பிள்ளைகள் எப்படியாவது போராடி படிக்கவைத்து விடுங்கள்.

படிப்புத்தான் கை கொடுக்கும். வீட்டில் கூறுகிறார்கள், சமூகம் கூறுகிறது என அடைப்பட்டு இருக்காதீர்கள். இந்த உலகம் பரந்து விரிந்தது. சுவர் மட்டுமே நமக்கு வாழ்க்கை அல்ல. பெண் பிள்ளைகள் போராட்ட குணத்துடன் இருங்கள். யாருக்காகவும் சுயமரியாதையை விட்டு தராதீர்கள். படிப்பையும், வேலையும் பிடித்துக் கொண்டு சொந்தக் காலில் நில்லுங்கள். வானம் வசப்படும்.”

ரேகா - “சுமார் 15 வருடங்களாக இதே தள்ளுவண்டியில்தான் குச்சி கிழக்கு, சோளம் என விற்று வருகிறேன். கணவரினால் குடும்பத்துக்கு ஆதரவில்லை. அந்த நிலையில் இந்த கடைத்தான் கைக் கொடுத்தது. இதில் வரும் பணத்திலிருந்து பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். தள்ளுவண்டி கடை வைத்திருப்பது என்பது நிச்சயம் சவாலான ஒன்று. அருகில் கடை வைத்திருப்பவர்கள் செய்யும் அதிகாரத்தை வார்த்தையால் கூற முடியாது. அவர்களுக்கு சிறு தொகை தினமும் நான் அளிக்க வேண்டும். பணம் தந்தால்தான் நிம்மதியாக வேலையை செய்ய விடுவார்கள். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கொடுக்கிறேன் என்றால் மாதம் 3,000 வருகிறது நீங்களே பார்த்து கொள்ளுங்கள். இப்படிதான் ஓடிக் கொண்டிருக்கிறது.

ரேகா

பெரிய மகிழ்ச்சி எல்லாம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதேயில்லை. இந்த தள்ளுவண்டி கடைத்தான் என் உயிர். எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் என் கடையை நோக்கி ஓடி வந்துவிடுவேன். மனிதர்கள் தராத நம்பிக்கையை என் தள்ளுவண்டி எனக்கும் அளிக்கும். பெண்பிள்ளைகளுக்கு நான் கூறுவது ஒன்றுதான். சொந்தக் காலில் நில்லுங்கள். காலம் எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது. எதனையும் தனியாளாக எதிர்கொள்ள தயாராக இருங்கள்..!”

அஞ்சலாச்சி, அமுதா, யாஸ்மின், ரேகாவின் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கக்கட்டும்...

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x