

கள்ளக்குறிச்சி: சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளி மகளிர் இன்று மொபட் பேரணியில் ஈடுபட்டனர்.
மார்ச் 8 மகளிர் தினத்தை சிறப்பிக்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான மொபட் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
முன்னதாக, பேரணியில் மொபட்டுடன் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மகளிருக்கு இனிப்புகள் வழங்கினார். இப்பேரணியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் பெண்கள் மொபட்டுடன் கலந்துகொண்டு மகளிர் தின மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.