

பு
த்தாயிரமாவது ஆண்டில் பிறந்தவர்களுக்கு தற்போது 17 வயது நிறைவடையப் போகிறது. தகவல் தொழில்நுட்ப யுகம் என்றழைக்கப்படும் இன்றைய ஐ.டி. யுகம் குழந்தையாக உருவெடுத்ததும், புத்தாயிரமாவது ஆண்டில்தான். புத்தாயிரமாவது ஆண்டில் பிறந்தவர்கள், இன்றைக்கு தொழில்நுட்ப விஷயங்களில் எப்படிப் பயணிக்கின்றனர் என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன. லண்டனில் செயல்பட்டு வரும் இளைஞர்களுக்கான பிரத்யேக இணையதளமான வோஸ்பர்னர், புத்தாயிரமாவது இளைஞர்களின் டிரெண்டுகள் பற்றி ஓர் ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. 16 வயது முதல் 24 வயதுவரை இளைஞர்கள் பங்கேற்ற அந்த ஆய்வு, என்ன சொல்கிறது?
புதுமை, படிப்பு
முந்தைய தலைமுறை இளைஞர்களுக்கு இல்லாத அளவுக்கு சமூக வலைதளங்களை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பயன்படுத்தும் வசதி தற்போதைய இளைஞர்களுக்கு இருக்கிறது. இந்த வசதி வாய்ப்புகள் அவர்களை சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட வைக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் துறை அல்லது படிப்புக்கு தேவையான விஷயங்களைத் தேடவும், அதுதொடர்பாக பரீட்சார்த்த முறையில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், சமூக வலைதளங்களை விரும்பிப் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக 16 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில், 45 சதவிகிதம் பேர் தாங்கள் அளவுக்கு அதிகமாக சாதித்து விட்டதாகவே மனதளவில் கருதுகின்றனர். அதே வேளையில் 54 சதவீதம் பேர் தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என விருப்பம் தெரித்துள்ளனர். அதாவது சாதித்து விட்டதாக பெருமிதம் கொண்டாலும், புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் இருப்பதை இது உணர்த்துகிறது.
வி.ஆர். தொழில்நுட்பம்
நண்பர்களுடன் சேர்ந்து கேளிக்கை நிகழ்வுகளுக்கு செல்வதைவிட வீட்டிலேயே அமைதியாக பொழுதைக் கழிக்க விரும்புவதாக 79 சதவீத இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ‘மெய்நிகர் உண்மை’ என்றழைக்கப்படும் வெர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்.)தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ள இந்தக் காலத்தில், தங்களின் கற்பனைத் திறனையும் அறிவுத் திறனையும் மேம்படுத்த அது உதவும் என 34 சதவீத இளைஞர்கள் நம்புகின்றனர். 2017-ம் ஆண்டில் மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளுக்கும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக வி.ஆர். தொழில்நுட்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எமோஜிமயம்
சமூக வலைதளங்களின் வருகையால், இன்றைய இளைஞர்களின் குறுஞ்செய்தி அனுப்பும் முறையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 92 சதவீத இளைஞர்கள் தாங்கள் அனுப்பும் மின்னஞ்சல், வாட்ஸ் அப் செய்தியில், எமோஜிகளை அதிகளவில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 60 சதவீத இளைஞர்கள் GIF எனப்படும் நகரும் படங்களை அனுப்ப ஆர்வம் காட்டுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வார்த்தைகளால் விவரிப்பதைவிட எமோஜி அல்லது GIF குறுஞ்செய்திகள், மிக விரைவாக நம் கருத்துகளை பிரதிபலிக்கும் என்பதே இளைஞர்களின் நம்பிக்கை.
பெண்ணுரிமை யுவதிகள்
இளம்பெண்களைப் பொறுத்தவரை தங்களை பெண்ணியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ளவே சமூக இணையதளங்களைப் பயன்படுத்த விரும்புவதாக ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சுமார் 69 சதவீத இளம் பெண்கள் இந்த எண்ணத்தில் இருக்கிறார்கள். சமூகத்தில் ஆண்களுக்கு நிகரான சமத்துவத்தை பெறுவதே பெரும்பாலான இளம் பெண்களின் இலக்காக இருக்கிறது.