பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், இளைஞர்களை அருகில் வரவிடாமல் சீறிப் பாய்ந்து ஓடிய காளை.
பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், இளைஞர்களை அருகில் வரவிடாமல் சீறிப் பாய்ந்து ஓடிய காளை.

பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் 600 காளைகள் பங்கேற்பு

Published on

கிருஷ்ணகிரி: பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சூளகிரி வட்டம் பேரிகை அருகே உள்ள முதுகுறிக்கி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி, எருது விடும் விழா நேற்று நடந்தது.இவ்விழாவில், பேரிகை, சூளகிரி, ஓசூர், பீர்ஜேப் பள்ளி, சானமாவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும், கர்நாடக மாநில எல்லையோரக் கிராமங்களிலிருந்தும் 600-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர்.

விழாவில் கலந்து கொண்ட காளைகள் அலங்கரிக்கப்பட்டு அதன் கொம்புகளில் விதவிதமான தட்டிகளில் ரொக்கப் பரிசுகள் வைத்து கட்டப்பட்டு இருந்தன. விழா தொடக்கத்தில் காளைகளுக்கு கோ-பூஜை நடந்தது. பின்னர் விழா திடலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த ரொக்கப் பரிசுகளை பறிக்க இளைஞர்களிடையே போட்டி நிலவியது.

காளைகளிடமிருந்து பரிசுகளைப் பறித்த இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். சில காளைகள் இளைஞர்களின் பிடியில் சிக்காமல் சீறிப் பாய்ந்து ஓடின. இதனால், காளைகளின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில காளைகள் பார்வையாளர்கள் பகுதியில் புகுந்ததால், காளைகள் முட்டியதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

விழாவினை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டைய மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்திருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in