

கன்னியாகுமரி: மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (22), அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவர், ‘ஒரே பாரதம், உண்மையான பாரதம்’, ‘பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு’ ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியா குமரிக்கு சைக்கிள் பயணத்தை கடந்த 1ம் தேதி தொடங்கினார்.
இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். மொத்தம் 3,600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து இங்கு வந்துள்ளார்.
கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் அலையும் துறவி கண்காட்சி முன்பு சைக்கிள் பயண வீராங்கனை மிஸ்கான் ரகுவன்சிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ., எம்.ஆர். காந்தி தலை மையில் பணகுடியைச் சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி ராஜாவின் கொள்ளுப்பேத்தி ராஜலட்சுமி நாச்சியார், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.