

கூடலூர்: கூடலூரில், பூத்துள்ள காபி பூக்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்க, கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலுார் பகுதி விவசாயிகள் தேயிலைக்கு அடுத்து அதிகளவில் காபி பயிரிடுகின்றனர். இப்பகுதியில், 2,400 ஏக்கர் பரப்பளவில் ‘அரபிக்கா’ காபியும், 4,497 ஏக்கர் பரப்பளவில் ‘ரோபஸ்டா’ காபியும் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1000 டன் அரபிக்கா காபியும், 3200 டன் ரோபஸ்டா காபியும் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டு தோறும், பிப்ரவரி மாதம் ரோபஸ்டா காபி செடியில் பூ பூக்கும். தற்போது காபி செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மாத இறுதியில் திடீரென பெய்த மழை காரணமாக கூடலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காபி செடிகளில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. எதிர்பார்த்ததை விட, அதிகமாக பூக்கள் பூத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காபி விவசாயிகள் கூறும் போது, ‘கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் தேயிலை மற்றும் காபி தான். கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால் மகசூல் பாதிக்கப்பட்டது. தற்போது மழை பெய்ததால் காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. தொடர்ந்து, மழை பெய்தால் மகசூல் அதிகரிக்கும்.
தேயிலைக்கு போதுமான விலை இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், காபியை நம்பியுள்ளனர்’ என்றனர். இந்நிலையில், தொடரும் பனிப் பொழிவு காரணமாகவும், கோடை மழை பொய்த்தாலும் மகசூல் பாதிக்கப்படும் என காபி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காபி வாரிய அதிகாரிகள் கூறும் போது, ‘கூடலூர், பந்தலூர் பகுதியில் ரோபஸ்டா காபி பிப்ரவரி மாதத்திலும், அரபிக்கா காபி ஏப்ரல் மாதத்திலும் பூ பூப்பது வழக்கம். தற்போது, ரோபஸ்டா காபி செடிகளில் அதிகளவில் பூக்கள் காணப்படுகின்றன. காபி அதிக மகசூல் கிடைக்க, 25 மி.மீ., மழை அவசியம். தற்போது, பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், ஐந்து மி.மீ., வரை தான் மழை பெய்துள்ளது.
பூ பூத்து, 20 நாட்களுக்குள் கோடை மழை பெய்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். மழை இல்லாத பட்சத்தில் நீர் தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம்’ என்றனர்.