

ஒரு பெரிய நிறுவனத்தின் அதி முக்கியமான சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரி ஒன்று ஒரு சுரங்கவழிப் பாதையைக் கடந்து செல்ல முயலும்போது சுரங்கத்தின் மேல்கூரையில் தட்டி சுரங்கப்பாதையின் பாதி வழியில் சிக்கிக்கொள்கிறது. சரக்கின் முக்கியத்துவம் கருதி வண்டியை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற பேராசையில் ஓட்டுநர் மேலும் மேலும் முயன்று பாரம் நிறைந்த வண்டியை சுரங்கப்பதையில் முன்பைவிட கூடுதலாக சுரங்கத்திற்குள் சிக்க வைத்து விடுகிறார்.
தனியாளாக வண்டியை எடுக்க முடியாது என்று தெரிந்ததும் உடனடியாக, தனது நிறுவனத்திற்கு தகவல் சொல்கிறார் ஓட்டுநர். வண்டியில் இருந்த சரக்கின் முக்கியத்துவம் கருதி அடுத்த சில மணிநேரங்களில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வண்டிச் சிக்கிக்கொண்ட சுரங்கப்பாதை முன் கூடுகின்றனர். வண்டியை வெளியே எடுக்க பல வியூகங்களை வகுக்கின்றனர். நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் தொடங்கி, மேலாளர் வரை பேசி கடையில் சுரங்கப்பாதையை உடைத்து வண்டியை வெளியே எடுக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட, அப்போது உயர் அதிகாரிகளுக்கு டீ கொண்டு வரும் அந்நிறுவனத்தின் ஊழியர் பிரச்சினை பற்றி கேட்கிறார்.
உயரதிகாரிகளில் ஒருவர் அங்கு நிலவும் சூழல் பற்றி கூற, அதற்கு அந்த ஊழியர், "இதுக்கு ஏன் சுரங்கப் பாதையை உடைக்கணும், பாதி வழி வரைக்கும் போன வண்டி சிக்கி இருக்குனா, கூரை மேல கொஞ்சமா தட்டி நிக்குதுனு தானே அர்த்தம். வண்டியோட உயரத்தை குறைச்சா வண்டி தானா வெளியே வரப்போகுது" என்கிறார். வண்டியோட உயரத்தைக் குறைக்கிறதா என்ற கேள்வியோட அதிகாரிகள் முறைக்க, அதற்கு கடைநிலை ஊழியர், “அட, நீங்க ஏங்க முறைச்சிக்கிட்டு வண்டில் இருக்கிற எல்லா டயர்களையும் கால்வாசி காத்த இறக்குனா வண்டி உயரம் குறைய போகுது. அப்புறம் வண்டி தன்னைப் போல வெளியே வரப்போகுது” என்றார். நம்பிக்கை இல்லாமல் வெறும் முயற்சியாக மட்டும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட, திட்டம் வெற்றி பெற்று வண்டி வெளியேறி விடும்.
புத்திசாலித்தனத்துக்கும் பார்க்கும் வேலைக்கும் எப்போதும் தொடர்பு இல்லை என்பதற்காக சொல்லப்படும் இந்தக் கதையை உண்மை என நிரூப்பித்திருக்கிறது ஸ்வீடன் நாட்டில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று.
ஸ்வீடனில் உள்ள லிங்கோபிங்க் பல்கலைக்கழகத்தின் பகுப்பாய்வு சமூகவியல் துறையின் மூத்த இணைப் பேராசிரியர் மார்க் கியூச்னிக் (Marc Keuschnigg) தனது குழுவினருடன் ஆய்வு ஒன்றில் ஈடுபட்டார். அதிக ஊதியம் என்பது ஊழியர்களின் புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையதா என்ற ஆய்வினை அவர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவு ஐரோப்பியன் சோஷியல் ரிவியூ இதழில் ஜனவரி மாதம் வெளியாகியானது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட அளவு வரை ஊதியம் பெறும் ஊழியர்கள் மட்டும் அதற்கான புத்திசாலித்தனத்துடன் இருக்கிறார்கள். அதிக ஊதியம் பெறும் 1 சதவீதம் பேர் புத்திசாலித்தனத்தில் அவர்களுக்கு கீழ் இருப்பவர்களை விட சற்று குறைவாகவே இருக்கின்றனர் என்று தெரிவந்துள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் மார்க் கியூச்னிக் தனது ஆய்வில் கூறுகையில், "அதிக அளவு ஊதியம் பெறும் உயர் பதவியில் இருப்பவர்கள், அவர்களை விட பாதியளவு சம்பளம் மட்டுமே பெருபவர்களை விட தகுதி மிக்கவர்கள் என்ற எந்த சான்றாதாரத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. தொழிலில் அடையும் பெரிய வெற்றி என்பது பெரும்பாலும் திறைமையை விட குடும்பத்தின் வாய்ப்புக்கள் அல்லது அதிர்ஷ்டம் மூலமே வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “புத்திசாலித்தனத்திற்கும் பெறும் ஊதியத்திற்கும் இடையில் அதிகரித்திருக்கும் இடைவெளி சமூகத்தில் வளம் மிக்கவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே வளர்ந்துவரும் வருமான சமத்துவமின்மையின் எச்சரிக்கை அறிகுறியேயாகும். ஒப்பீட்டு அளவில் ஸ்வீடன் குறைவான வருமான இடைவெளி உள்ள நாடு. இந்த இடைவெளி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் அதிகமாக இருப்பதைக் காணலாம்.
அதிகம் ஊதியம் பெறும் உயர் பதவிகளில் இருக்கும் நபர்கள் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் அதிகமான மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. அதனால், நமது சமூகம், உயர் பதவிகளில் சரியான நபர்கள் இருக்க விரும்புகிறது” என்றார்.
ஸ்வீடனில் பிறந்த 59,387 ஆண்களின் அறிவாற்றல் திறனை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு கட்டாய ராணுவ சேவையின் ஒரு பகுதியாக ஆண்களின் நுண்ணறிவு திறன் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், மொழித் திறன், தொழில்நுட்பத் திறன், இடம் சார் அறிவு, தர்க்கம் ஆகியவை அடங்கியிருந்தது. ஆரம்ப தரவுகள் பதிவுசெய்யப்பட்ட 1971 -1977 மற்றும் 1980 -99 காலக்கட்டங்களில் பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை இல்லாததால் அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.