

பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இயற்கையின் உள்ளீடாக இன்றும் ஒவ்வொரு உயிரினத்திடமும் நிலைபெற்றுள்ளது காதல். அக்காதலை தனது வாழ்நாள் முழுவதும் கொண்டாடி தீர்த்தவர் பாரசீக கவிஞர் ரூமி. அவரைப் பொறுத்தவரை காதல்... இறைக் காதல், மானுடக் காதல், பிரபஞ்சக் காதல் என பல வடிவங்களை கொண்டவை. ரூமியின் கவிதையை வாசித்தல் என்பது காதலை வாசித்தலே. புரிந்துகொள்ளுங்கள்... ரூமி கூறுகிறார் காதல் ஒன்றே நிஜம்... அந்த வகையில் ரூமியின் காலத்தால் அழியாத ரூயின் காதல் கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம்:
முதல் காதல் கதையை
நான் கேட்டவுடன்
உன்னைத் தேடத்
துவங்கினேன்,
எவ்வளவு கண்மூடித்தனமானது அது
என்பது தெரியாமலே
காதலர்கள்
இறுதியில் எங்கேனும்
சந்தித்துக் கொள்வதில்லை.
அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக
இருந்து வருகிறார்கள்
காலங்காலமாக
***
உனை நீ
அறியும் வழக்கம்
உள்ளதா உனக்கு?
விவாதமும் வேண்டாம்
சாதுர்யமான பதிலும்
வேண்டாம் இங்கு
மரணிப்போம் நாம்,
மரணித்தபடி
பதிலளிப்போம்
***
நீயொரு
உண்மையான மனிதனெனில்
எல்லாவற்றையும் பணயம் வை
காதலுக்காக.
இயலவில்லை எனில்
சென்றுவிடு இங்கிருந்து
அரைகுறை மனதிற்கு
அகண்டவெளி அகப்படாது.
பேரருளை நோக்கி
பயணிக்கத் திர்மானித்த நீ
சிறுமைபடர்ந்த விடுதிகளில்
நெடுங்காலம்
இளைப்பாறிவிடுவது ஏன்?
***
எப்போதும்
மறைவிலிருந்து தலை நீட்டும்
காதலின் ரகசியம்
இதோ நானிருக்கிறேன்! என.
***
காதலின் வழி
நுட்பமான விவாதமல்ல
பிரளயமே
அங்கு செல்வதற்காக
வாயில்...
***
இரவில்,
சாளரத்தை திறந்து
நிலவை அழைப்பேன்
அதன் முகத்தை
என் முகத்தோடு
நெருக்கமாகப் பொருத்த
உயிர்மூச்சை எனக்கு வழங்க
மொழியெனும் வாசல் அடைபட்டு
காதலின் சாளரம் திறக்கட்டும்..
***
நிலவிற்கு வழி
வாசல் அல்ல
சாளரமே...
| தொகுப்பு: இந்து குணசேகர் |