

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் ரஷ்ய பெண்ணை இளைஞர் ஒருவர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன்- கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகன் பிரபாகரன்(33). இவர் ரஷ்யாவில் கடந்த 10 ஆண்டுகளாக யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி - மயூரா தம்பதியரின் மகள் அல்பினால் (31) என்பவரை பிரபாகரன் காதலித்து வந்தார்.
இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் பிரபாகரனுக்கும், அல்பினாலுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மதுக்கூரில் நேற்று பிரபாகரனுக்கும், அல்பினாலுக்கும் ஓதுவார்கள் முன்னிலையில், தாலி கட்டி, தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இது குறித்து பிரபாகரன் கூறியபோது, “நான் யோகா ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், என்னுடைய யோகா மாணவியாக அல்பினால் பயிற்சிக்காக வந்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. எங்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன், அவர்கள் முன்னிலையிலேயே திருமணம் நடைபெற்றது” என்றார்.
அல்பினால் கூறியபோது, “ரஷ்யா கலாச்சாரத்தைவிட, தமிழ் கலாச்சாரம், இங்குள்ள மக்கள், வாழ்வியல் முறை, இயற்கை சார்ந்த அமைப்புகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழில் பேசி, நானும் ஒரு தமிழ்ப் பெண்ணாக மாறிவிடுவேன்” என்றார்.