

மதுரை: சாலையில் வீசப்பட்ட (நெகிழி) பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து மதுரையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வரும் நெகழ்ச்சி சேவை செய்து வருகிறார்.
தற்போதைய நாகரிக வாழ்வில் நாம் கையில் தண்ணீர் கொண்டு செல்வதில்லை. தண்ணீர் தாகம் எடுக்கிற இடங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்கி தண்ணீர் குடிக்கின்றனர். பிறகு அந்த பாட்டில்களை சாலையில் வீசிச்செல்கின்றனர். இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் பூமியில் மக்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. குறிப்பாக இந்த நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் நசுங்கி மண்ணுக்கும் கீழ் சென்று மக்கா குப்பையாகி மழைநீர் பூமிக்குள் செல்ல இயலாது மண் வளம் வீணாகிறது.
இவ்வகை நெகிழி குடுவைகளை மதுரையை சேர்ந்த தன்னார்வலர் க.அசோக்குமார், சேகரித்து இயற்கைக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தும் மாற்று முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது கோடை காலங்களில் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலம் கூட பறவைகள் தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தடுமாறுகின்றன. அதனால், சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை இவர் சேகரித்து பறவைகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்யும் நோக்கில் மதுரை சாலையோரங்களில் உள்ள மரங்கள், குடியிருப்புகளில் உள்ள மரங்களில் உள்ள கிளைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை தொடங்க விட்டு நீர் நிரப்பும் பணியினை செய்து வருகிறார்.
நேற்று அவர் காந்தி அருங்காட்சியகம் வளாகத்தில் மரங்களில் வசிக்கும் பறவைகளுக்காக அந்த மரங்கிளைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை தொடங்கி வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்தார். சமூக ஆர்வலர் க.அசோக்குமாரின் இந்த சேவையை மதுரையை சேர்ந்த பறவையியல் ஆர்வலர்கள் மட்டுமில்லாது சாதாரண பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள்.