“பதற்றத்தை தணித்த அனில் கபூர்” - விமானப் பயண அனுபவத்தை நெகிழ்வுடன் பகிர்ந்த பெண்

“பதற்றத்தை தணித்த அனில் கபூர்” - விமானப் பயண அனுபவத்தை நெகிழ்வுடன் பகிர்ந்த பெண்
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் அவர் குறித்து நெகிழ்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாக பரவி வருகிறது.

தொழில்முனைவோராக இருக்கும் ஷிகா மிட்டல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எந்தப் பிரபலங்களுடனும் படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கூட அனில் கபூருடன் இல்லை. இது ஒரு சக பயணியுடன். 2 மணிநேரத்துக்கும் மேலான இடைவிடாத உரையாடல்” என கூறி செல்ஃபி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

விமானம் பறக்க தொடங்கியபோது, குலுங்குவது போல இருந்ததால் தலைக்கு மேல் இருந்த லக்கேஜ் கேபின் லேசாக ஆடியிருக்கிறது. இதைக் கண்ட ஷிகா மிட்டலுக்கு சிறிது மன பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பாலிவுட் நடிகர் அனில் கபூர், ஷிகாவுக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் அவரது பதற்றத்தைக் குறைக்கும் வகையில், “பதறாதீர்கள். உங்கள் பெயர் என்ன? நாம் பேசுவோம்” என பேச்சுக் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து, இருவரும் இணைந்து பதற்றத்துக்கான காரணம், பொருளாதார திட்டம், திரைபடங்கள், காஃபி என அடுத்தடுத்து பேசியிருக்கிறார்கள்.

இப்படியாக இருவரது விமான பயணமும் முடிந்திருக்கிறது. இது குறித்த ஷிக்கர் மிட்டலின் பதிவில், “அந்த சமயத்தில் அவராக வந்து பேசியிருக்காவிட்டால் அவரிடம் நானும் பேசியே இருக்க மாட்டேன். ஆனால், அந்த இரண்டு மணிநேரம் நாங்கள் நிறைய மகிழ்வான விஷயங்கள் பற்றி பேசி சிரித்தோம். இது ஏதோ விமானம் புறப்பட்டதும் தரையிறங்கிய உணர்வையே கொடுத்தது. தரையிறங்கிய பிறகுதான் ஒன்றை யோசித்தேன். நிறைய பேர் மனப்பதற்றம் மோசமானது என கூறுவார்கள். உண்மையில் அன்று அந்த ஆக்ஸைட்டி தான் எனக்கு அனில் கபூருடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. இறுதியாக டெல்லியில் எனக்கு காஃபி ட்ரீட் கொடுக்கலாம் என கூறிவிட்டு அனில் கபூர் சென்றுவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in