

ஹைதராபாத்: இருளில் அதிக நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்திய காரணத்தால் கண் பார்வையில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளார் ஹைதராபாத் பெண் ஒருவர். இந்தத் தகவலை அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர் பகிர்ந்துள்ளார். இரவு நேர இருளில் ஸ்மார்ட்போனில் சமூக வலைதளத்தை ஸ்க்ரோல் செய்யும் பழக்கத்தினால் இது நேர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகிப் போகிற பழக்கத்தால் ஏற்படும் உடல் சார்ந்த ஆரோக்கிய சீர்கேடுகள் குறித்து நாம் அனைவரும் அறிந்தவர்கள்தான். இருந்தபோதும் இன்றைய டெக் யுகத்தில் அதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. சிலர் உடல் நலன் சார்ந்து இந்த சாதனங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் அதை செய்யாதவர்கள் பல்வேறு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அவர்களில் ஒருவர்தான் 30 வயதான தனது நோயாளி என சொல்கிறார் மருத்துவர் சுதீர் குமார். பார்வையில் சிக்கல் இருப்பதாக அந்த நோயாளி அவரை அணுகியுள்ளார். சம்பந்தப்பட்ட நோயாளியை முழுவதுமாக பரிசோதித்ததில் ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
அவரது தினசரி பழக்க வழக்கங்களை கேட்டபோதுதான் அவர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு எந்தளவுக்கு அடிமையாகி உள்ளார் என்பதை மருத்துவர் அறிந்து கொண்டுள்ளார். 18 மாதங்களாக பகல் நேரம் மட்டுமல்லாது இரவு வீட்டில் விளக்குகளை ஆஃப் செய்த பின்பும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போனை நோயாளி பயன்படுத்தி வந்துள்ளார். அதனால் அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிந்தது.
நோயாளிக்கு உரிய சிகிச்சை மற்றும் ஸ்க்ரீன் டைமை குறைத்துக் கொண்டதன் மூலம் தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். தனது நோயாளியை போல யாரும் பாதிக்கப்படாமல் இருக்க தேவைப்பட்டால் மட்டும் போனை பயன்படுத்துமாறும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
மொபைல் அனாலிட்டிக்ஸ் நிறுவனமான டேட்டா.ஏஐ கூற்றுப்படி இந்தியாவில் மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வரும் நேரம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ல் நாள் ஒன்றுக்கு 3.7 மணிநேரத்தில் இருந்து 2020ல் 4.5 மணிநேரமாக அதிகரித்துள்ளது. 2021-ல் இது நாள் ஒன்றுக்கு 4.7 மணிநேரமாக அது கூடியுள்ளது. ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத சாதனம் ஆகியுள்ளது. இருந்தாலும் அதன் ஸ்க்ரீன் டைமை குறைப்பதன் மூலம் இது மாதிரியான பாதிப்புகளை தவிர்க்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.