Published : 08 Feb 2023 08:05 PM
Last Updated : 08 Feb 2023 08:05 PM

திருப்பரங்குன்றம் மலைக்குகையில் 2200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

மலை குகையில் காணப்படும் தமிழி எழுத்துகள்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குகையில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழி கல்வெட்டு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குன்று முழுவதும் வரலாற்று சிறப்புடையதாகத் திகழ்கிறது. இக்குன்றில் முற்கால பாண்டியர்களின் பல குடைவரைக் கோயில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் எதிரிலுள்ள குன்றின் மேற்குச் சரிவில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுக்கைகளும் கி.மு.1 மற்றும் கி.பி.1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மேலே உள்ள குகைக்கு செல்லும் வழியில் அதன் இடதுபுறம் ஒரு சிறிய குகை உள்ளது. இதன் உள்ளே 5 கற்படுக்கைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்புப் பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு காடி வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு இருப்பதை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்து வரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டறிந்தார்.

அவர் அளித்த தகவலின்படி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று இக்கல்வெட்டை படி எடுத்தனர். பின்னர் தமிழக அரசின் ஓய்வுபெற்ற தொல்லியலாளர் சாந்தலிங்கம் துணையுடன் படியெடுத்த கல்வெட்டை படித்ததில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு என அறியப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் வே.ராஜகுரு, வெ.பாலமுரளி ஆகியோர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலைக்குகையில் புதிதாக கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இரண்டு வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் வரியில் த, ர போன்ற எழுத்துகள் தவிர மற்றவை சிதைந்துள்ளன. இரண்டாம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன, சில எழுத்துகள் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. முதல் வரியின் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாம் வரியில் உள்ள எழுத்துகளை 'யாரஅதிறஈத்த/////வதர' என படிக்கலாம். குகையில் வெட்டப்பட்டுள்ள ஐந்து கற்படுக்கைகளைக் குறிக்க 5 என்ற எண்ணுக்குப்பதிலாக 5 கோடுகள் வெட்டப்பட்டுள்ளன.

இக்கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் பெயராக ‘யாரஅதிற’ என்பதைக் கொள்ளலாம். இதன் இறுதியில் உள்ள எழுத்துகளை அதிட்டானம் என படிக்கலாம். இதில் ‘அ’ சிதைந்துள்ளது. அதிட்டானம் என்றால் இருக்கை என்ற பொருளுண்டு. இது குகையில் வெட்டப்பட்டுள்ள கற்படுக்கையிலான இருக்கையைக் குறிக்கிறது. அரிட்டாபட்டி, தொண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள தமிழிக் கல்வெட்டிலும் 3 கற்படுக்கைகளைக் குறிக்க 3 கோடுகள் செதுக்கப்பட்டுள்ளதுபோல், இங்கு 5 கோடுகள் வரையப்பட்டுள்ளன.

கடினமான பாறையிலும் கல்வெட்டு சிதைந்திருப்பது, ‘அ, ர’ போன்ற எழுத்துகளின் வடிவமைப்பு, ‘ஐந்து’ என்ற எண்ணைக் குறிக்க ஐந்து கோடுகளை செதுக்கியிருக்கும்

முறை ஆகியவற்றைக் கொண்டு இதன் மேலே உள்ள 3 குகைக் கல்வெட்டுகளை விட புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதை அறியலாம். எனவே இக்கல்வெட்டை கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இக்கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையும், மாநில தொல்லியல் துறையும் மேலும் ஆய்வு செய்து இதன் முழு வாசகத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x