

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அப்பாச்சி (Apache RR 310) பைக்கை ஜாலியாக ரைட் செய்து சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. அநேகமாக இது ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அவர் பயிற்சிக்கு வந்த போது எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
தோனி, கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு அவர் ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். தற்போது கூட எதிர்வரும் சீசனுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்தச் சூழலில் அவர் பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தலைக்கவசம் அணிந்த படி சிவப்பு நிற Apache RR 310 பைக்கை தோனி ஓட்டி செல்கிறார். இந்த பைக் 2019 எடிஷன். இந்த எடிஷனில் வெளிவந்த முதல் பைக்கை தோனிதான் வாங்கியுள்ளார். இதனை டிவிஎஸ் Apache உறுதி செய்துள்ளது. வாகனப் பிரியரான அவர் ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் கிளாசிக் ரக பைக்கை அதிகம் வைத்துள்ளார். அது தவிர அவர் வீட்டில் நிறைய கார்களின் கலெக்ஷனும் உள்ளது.
ஹம்மர் எச் 2, மிட்சுபிஷி பஜேரோ, ஜி.எம்.சி சியரா பிக்-அப் டிரக், போர்ஷே பாக்ஸ்டர், ஃபெராரி 500 ஜி.டி.ஓ, ஆடி கியூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் மற்றும் அண்மையில் வாங்கிய ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் ரக வின்டேஜ் கார் என பல கார்களை தோனி வைத்துள்ளார். இது தவிர ஹெல்கேட், நிஞ்சா மாதிரியான பைக்குகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.