

புதுடெல்லி: மாநகரங்கள், தொழில், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் அமெரிக்கா, கனடாவைவிட இந்தியா முன்னணியில் இருப்பதாக சர்வதேச ஆய்வு நிறுவனமான தோலோன்ஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில், வாழ்க்கைத்தரம், கண்டுபிடிப்புகள், டிஜிட்டல், மாநகரங்கள் என பல்வேறு அம்சங்களில் முன்னணி வகிக்கும் 10 நாடுகளின் தற்போதைய நிலை தொடர்பாக தோலோன்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஐயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், டென்மார்க் ஆகிய 10 நாடுகளில் இந்த அம்சங்களின் தற்போதைய நிலை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகரங்கள், தொழில், வாழ்க்கை ஆகிய 3 அம்சங்களில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
மாநகரங்களுக்கான அளவீட்டில் 10-க்கு 10 மதிப்பெண்களையும், தொழிலுக்கான அளவீட்டில் 10-க்கு 9.67 மதிப்பெண்களையும், வாழ்க்கைக்கான அளவீட்டில் 10-க்கு 9.34 மதிப்பெண்களையும் இந்தியா பெற்றுள்ளதாக தோலோன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த 3 அம்சங்களிலும் 2-வது இடத்தை அமெரிக்காவும், 3-வது இடத்தை கனடாவும் பிடித்துள்ளன.
அதேநேரத்தில், புதுமை / டிஜிட்டல், பன்முகத்தன்மை / பகிர்வு / இணைவு, நிலைத்தன்மை ஆகியவற்றில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் கனடாவும், 3-ம் இடத்தில் இங்கிலாந்தும், 4-ம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளன. இந்த இரண்டிலும் இந்தியா பின்தங்கி உள்ளது. புதுமை / டிஜிட்டலில் 10-க்கு 6.19 மதிப்பெண்களையும், பன்முகத்தன்மை / பகிர்வு/ இணைவு-ல் 10-க்கு 5.32 மதிப்பெண்களையும், நிலைத்தன்மையில் 10-க்கு 2.50 மதிப்பெண்களையுமே இந்தியா பெற்றுள்ளது.