விருதுநகரில் முதன்முறையாக ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட இன்டர்லாக் வீடு - 600 சதுர அடியில் அசத்தல்

விருதுநகரில் முதன்முறையாக ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட இன்டர்லாக் வீடு - 600 சதுர அடியில் அசத்தல்
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக ரூ.15 லட்சத்திற்கும் குறைந்த செலவில் 600 சதுர அடியில் இன்டர் லாக் முறையில் வீடு கட்டப்பட்டுள்ளது.

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வெயிலான் ரமேஷ். விருதுநகரில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். தனக்குச் சொந்தமான இடத்தில் புதுமையாகவும், குறைந்த செலவிலும், முற்றத்துடன் பழமையான முறையில் வீடு கட்ட வேண்டும் என்பது இவரது கனவு. அதை செயல்படுத்த பல்வேறு இடங்களிலும் அவரது தேடல்கள் விரிந்தது. இறுதியில், தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதைப் போன்று இன்டர்லாக் முறையில் சுடாத மண் கல்லை வைத்து வீடு கட்டும் முயற்சியல் இறங்கி, தான் விரும்பியதைப் போலவே வீடும் கட்டி முடித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்முறையாக இன்டர் லாக்கிங் முறையில் வீடு கட்டியது தான்தான் என்றும் பெருமையோடு கூறுகிறார்.

இதுபற்றி வெயிலான்ரமேஷ் கூறுகையில், "மொத்த இடம் 800 சதுர அடி. அதில், 600 சது அடியில் வீடு கட்ட திட்டமிட்டேன். ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கேரளாவிலிருந்து இன்டர் லாக் கற்கல் எனப்படும் "மட் இன்டர்லாக்" கற்கள் கிடைத்தது. வழக்கம்போல் அடித்தளம் அமைத்த பின்னர், இந்த மட் இன்டர் லாக் கற்களைக் கொண்டு சுவர் எழுப்பினோம். 8 அங்குளம் அகலம் உள்ள ஒரு கல் சுமார் 14 கிலோ வரை எடையுள்ளது. ஒரு கல்லின் விலை ரூ.60. குறிப்பாக இந்த வீட்டுக்கு பில்லர்கள் ஏதும் கிடையாது.

இணைப்புக் கற்கள் மூலமே மூலை மட்டங்களும் கோர்த்துக் கட்டப்பட்டுள்ளன. கற்களை ஒழுங்காக அடுக்கும் முறைதான் என்பதால் மூன்றே நாள்களில் சுவர் எழுப்பினோம். சிமெண்ட் பூச்சு கிடையாது. கேப் பில்லிங் என்ற ரசாயன பூச்சு மட்டுமே இடைவெளியில் பூசப்பட்டது. மேல் தளத்தில் காற்றோட்டம் வேண்டும என்பதற்காக மேலும், தலைகீழுமாக இரு ஓடுகள் ஆங்காங்கே பதித்து கான்கிரீட் அமைத்துள்ளோம். இதனால் கன்கிரீட் செலவும் குறைந்தது.

நிலை, கதவு, ஜன்னல் அனைத்தும் பழைய மரக்கடைகளிலிருந்து வாங்கி வந்து பொருத்தினோம். ஒரு ஹால், 2 படுக்கை அறைகள், ஒரு சமையலறை மற்றும் முற்றத்துடன் வீடு கட்டி முடிக்கப்பட்டது. குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தரையிலும் கிளே டைல்ஸ் பதித்துள்ளோம். மொத்த செலவு ரூ.15 லட்சத்திற்குள் முடிந்தது. இன்டர்லாக் முறையில் விருதுநகர் மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல்வீடு இதுதான். இந்த வீடு எப்போதும் காற்றோட்டமாகவும் குளுமையாகவும் இருக்கும். இதை சுவாசிக்கும் வீடு என்றும் சொல்வதுண்டு" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in