

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, போலீஸ் சீருடையில் மிடுக்கோடு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக வலம் வந்து கொண்டுள்ளது. அந்தப் படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ‘இவர்தான் அசல் சிங்கம்’, ‘இது சூப்பர் சிங்கம்’, ‘சூப்பர் போலீஸ்’ என்றெல்லாம் சொல்லி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் தோனி. அதற்காக அவர் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என அனைவரும் அறிவோம். ராஞ்சியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான டி20 போட்டியின் போது அவர் இந்திய வீரர்களை சந்தித்திருந்தார். போட்டியையும் நேரில் பார்த்து ரசித்திருந்தார்.
தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருந்த போதும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கென உள்ள அந்த கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை. அவ்வப்போது அவர் நடிக்கும் விளம்பரங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பர். சமயங்களில் அது புகைப்படமாக கூட இருக்கும். அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு வெளியான பல தடைகளை தகர்த்து செல்லும் ரயில் விளம்பரத்தை சொல்லலாம்.
அது போல இந்த முறை தோனி, போலீஸ் வேடத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்தான் இப்போது வைரலாகி உள்ளது. தோனி, இந்திய பிராந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.