Published : 01 Feb 2023 03:51 PM
Last Updated : 01 Feb 2023 03:51 PM

90ஸ் ரீவைண்ட்: ஐஸ் வண்டியும் ஐஸ் மாமாவும்

90ஸ் ரீவைண்ட்

‘கிண் கிண்…’ எனத் தூரத்தில் மணி அடித்தாலே அவர் வந்துவிட்டார் என்பதைக் குறிப்பால் அறிந்து கொண்டு, அடிவயிற்றிலிருந்து பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிடும். மற்ற எல்லா சப்தங்களையும் ஊடுருவி என் காதுகளை எட்டும் அந்த மணி ஓசை!

மணி ஓசை அருகில் வருவதை உணர்ந்துவிட்டால், கையில் ஒரு டம்ப்ளரை எடுத்துக்கொண்டு தெருவை நோக்கி சடசடவென ஓடும் எனது கால்கள்! என்னைப் போலவே தெரு முழுவதும் சிறுவர்கள் அவருக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள்.

வெள்ளை நிறத்தில் சட்டை! அதில் நீல நிறப் பட்டை... உள்ளுக்குள் ஆயிரம் கவலை இருந்தாலும் முகத்தில் மாறாத புன்னகை! வெள்ளைப் பெட்டி, அதற்குள் பல்வேறு ரக ஐஸ்களை வைத்துத் தள்ளிக்கொண்டே வருவார் அந்த ஐஸ் மாமா! அவருக்கோ அது ஐஸ் பெட்டி! சிறுவர்களான எங்களுக்கோ அது பொக்கிஷப் பெட்டி!

ஐஸ் ரகங்கள்: அந்தப் பெட்டிக்குள் எட்டிப்பார்க்கும்போதோ பேரானந்தம் எங்களுக்குள்! பால் ஐஸ், கப் ஐஸ், மேங்கோ, கிரேப் என நாவூறச் செய்யும் விதவிதமான ஐஸ்கள்! இன்றும் என் கண்முன்னே சில்லென எட்டிப்பார்க்கின்றன அந்த ஐஸ் ரகங்கள்! ஐம்பது காசுக்குக் கிடைக்கும் கிரேப் ஐஸ்ஸே பெரும்பாலும் நாவைத் தீண்டும்! திருவிழா நாட்களில் மட்டும் அசைவம் சாப்பிட வாய்ப்பு கிடைப்பதைப் போல, சில நேரங்களில் இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் பால் ஐஸ்ஸை சப்புக்கொட்ட வாய்ப்பு கிடைக்கும். வெள்ளைப் பனியாய் இருக்கும் அந்த பால் ஐஸ்ஸோ அமிர்தமாய் இனிக்கும்!

நாளைக்குப் பால் ஐஸ் வாங்கித் தருகிறேன் என்று யாராவது சொல்லிவிட்டால், இரவு கனவிலும் பால் ஐஸ் தான்! கப் ஐஸ் கிடைப்பது அரிதிலும் அரிது! எனக்குத் தெரிந்து மூன்று ரூபாய், நான்கு ரூபாய், ஐந்து ரூபாய்க்கு கப் ஐஸ்கள் கிடைத்தன! அத்தெருவிலே இருக்கும் மாடி வீடுகளில் கப் ஐஸ் விற்பனை படு ஜோராக இருக்கும்.

ஐஸ் மாமாக்கள்: பொதுவாக ஐந்தாறு வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஐஸ் வண்டியைச் சூழ்ந்துகொள்வார்கள். சில நேரங்களில் பத்து பதினைந்து வீடுகளிலேயே ஐஸ் ரகங்கள் முழுமையாக விற்பனை ஆவதுமுண்டு! பெட்டிக்குள் சென்று பார்க்கும் போது, ஐஸ் வகையறாக்கள் இல்லை என்றால் அது பெரும் ஏமாற்றம் எங்களுக்கு! ‘இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுறேன் கண்ணுங்களா…’ என்று சொல்லிவிட்டு ஐஸ் ஃபேக்டரி நோக்கி வண்டியைத் தள்ளிக் கொண்டு நகரும் ஐஸ் மாமாக்கள் சிறுவர்களான எங்களுக்கு ஹீரோவாகத் தெரிவார். சில நேரங்களில் ஐஸ் தாத்தாக்களும் வருவதுண்டு. எப்போதாவது ஐஸ் மாமாக்கள் விடுமுறை எடுத்துவிட்டால், பக்கத்துத் தெருவில் கேட்கும் மணி ஓசைகளை நோக்கி விரைவதுண்டு! இங்கே நான் குறிப்பிடும் ஐஸ் வண்டிகள் ஐஸ் பெட்டிகளை மிதி வண்டிகளில் வைத்து விற்பனை செய்த வகையறாவுக்கு முற்பட்டது!

தொண்ணூறுகளின் மத்தியில் ஐஸ்கிரீம் விற்பனை என்ற பெயரில் நிறுவனங்கள் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியவுடன், ஐஸ் மாமாக்கள் மெள்ள மெள்ள மறைந்து போகத்தொடங்கினர். 2000த்தின் தொடக்கத்தில் கூட ஐஸ் ஃபேக்டரிக்களும் சில ஐஸ் வண்டிகளும் கண்ணில் தென்பட்டன! ஆனால் அதன் பிறகு பல ஐஸ் ஃபேக்டரிகளுக்கு மூடு விழா நடத்திவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர் ஐஸ் வியாபாரிகள்!

இன்று தெருக்களில் கிண் கிண் மணி ஓசைக்கு மாற்றாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் ஒலிபெருக்கி சத்தம் காதைக் கிழிக்கின்றன. எனது காதுகள் மட்டும் இன்றும் அவ்வொலிகளை மீறி ஐஸ் வண்டிகளின் கிண் கிண் மணி ஓசையைத் தேடி வருகின்றன.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x