

நாகர்கோவில்: சுமார் 370 கிலோ எடையுள்ள காரை சுமந்தபடி 25 மீட்டர் தூரம் நடந்து குமரி வீரர் சாதனை புரிந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாமரைபுட்டிவிளையைச் சேர்ந்தவர் கண்ணன்(40). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக பளு தூக்கி சாதனை புரிந்து வருகிறார். நாகர்கோவிலில் நடந்த சர்க்கஸ் ஒன்றில் இளவட்ட கல்லை ஒற்றைக் கையால் லாவகமாக தூக்கி பிரமிக்க வைத்தார்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு பிட்னஸ் தொடர்பாக தனிப்பட்ட பயிற்சியாளராக இருந்து வருகிறார். மூன்று முறை ‘ஸ்ட்ராங் மேன் ஆஃப் இந்தியா’ பட்டம் வென்றுள்ளார். பஞ்சாபில் நடந்த உலக வலிமையான மனிதர் போட்டியில் 3-ம் இடம் பிடித்தார். நாகர்கோவிலில் சமீபத்தில் 9.5 டன் எடை கொண்ட லாரியை 90 மீட்டர் நீளம் இழுத்து பாராட்டு பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக 370 கிலோ எடையுள்ள காரை சுமந்தபடி 25 மீட்டர் தூரம் நடந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நேற்று ‘யோக் வாக்` நடத்தினார். இந்நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடக்கி வைத்தார். இச்சாதனையை சோலார் உலக சாதனை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
கண்ணன் கூறும்போது, “ அதிக எடையுள்ள பொருட்களை சுமந்தபடி நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பது உடற்பயிற்சியாளரான எனது லட்சியம். இதற்கு உலக அளவில் என்னுடன் போட்டியிட யார் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். பஞ்சாப் சண்டிகர் பல்கலைக் கழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உலக வலிமையான மனிதர் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறேன்” என்றார்.