

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 9 நாட்கள் நடைபெறும் இரண்டாம் ஆண்டு இலக்கிய திருவிழாவை சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறையுடன் இணைந்து நடத்தும் இரண்டா மாண்டு ‘திருப்பத்தூர் இலக்கிய திருவிழா’ நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர் வரவேற்றார்.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘திருப் பத்தூர் இலக்கிய திருவிழா’வை தொடங்கி வைத்தார். ‘திருப்பத்தூர் இலக்கிய திருவிழா’ நேற்று தொடங்கி வரும் 5-ம் தேதி வரை நடைபெறவுள் ளது. இலக்கிய திருவிழா காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இலக்கிய திருவிழாவுக்காக 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த புத்தக கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும், வாசிப்புத் திறனை பெருக்கிக் கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது.
தினசரி பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், மொழி பெயர்ப்பாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் 17 அமர்வுகளில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் கருத்தரங்கில் பேசவுள்ளனர்.
திருப்பத்தூர் இலக்கிய திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அவர்கள் பேசும்போது 10 நாட்களுக்குள் நான் தமிழில் ஒரு கவிதை எழுத வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, 10 நாட்களுக்குள் தமிழில் ஒரு சிறிய கவிதை எழுத முயற்சிக்கிறேன்.
தற்போது, சமூக வலைதளம் பெரிய சவாலாக உள்ளது. சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் விரைவில் பரவி விடுகின்றன. மாணவர்கள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர். அவர்கள் புத்தகம் வாசிப்பது குறித்து எடுத்துரைக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
புத்தகம் படிப்பதால் குடும் பத்தின் முக்கியத்தும் பற்றி அறிந்துகொள்ள முடியும். அனைவரும் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்வதால் உறவினர்களிடம் பேச நேரம் ஒதுக்க முடிவதில்லை. ஆனால், ஒரு புத்தகத்தை படிப்பது 10 பேரிடம் உரையாடுவதற்கு சமம். இதன்மூலம் ஆளுமை திறன் வளர்ச்சியடையும். இந்திய ஆட்சிப் பணிக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் ஒரு பாடமாக தமிழ் இலக்கியத்தை தேர்வு செய்ய வேண்டும்.
எனது இந்திய ஆட்சிப் பணி தேர்வில் இந்தி இலக்கியம் ஒரு பாடமாக தேர்வு செய்து படித்தேன். நான் சிறுவயதில் இருந்து புத்தகம் படிப்பதால் இலக்கியத்துக்காக எந்த ஒரு புத்தகங்களையும் வாங்கிப் படிக்கவில்லை. இறுதி தேர்வில் 600-க்கு 414 மதிப்பெண் எடுத்தேன். இதுவே, எனது அனைத்து பாடத்திலும் அதிக மதிப்பெண் ஆகும்.
திருப்பத்தூரில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் இலக்கிய திருவிழாவில் ரூ.70 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகின. இந்தாண்டு அதைவிட அதிகமாக ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாவதற்கு மாவட்டத்தில் உள்ள வணிகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இலக்கிய திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், டெல்பிக் கவுன்சில் ஆப் தமிழ்நாடு தலைவர் இஸ்ரத் அக்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியாக, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நன்றி தெரிவித்தார்.