

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் விளைச்சலில் சாதித்த பெண்வி வசாயிக்கு தமிழக முதல்வர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலக்கல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வசந்தா. இவர், ஆலவயல் பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் சுமார் 2.5 ஏக்கரில் கடந்த ஆண்டு செம்மை நெல் சாகுபடி எனும் தொழில்நுட்ப முறையைப் பின்பற்றி சாகுபடி செய்திருந்தார்.
இதில், நெல் உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக விவசாயி வசந்தாவுக்கு, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிப் பாராட்டினார்.
மாநில அளவில் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருதைப் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தாவை விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வசந்தா கணேசன் கூறியது: ஆலவயலில் உள்ள 2.5 ஏக்கரில் சணப்பு உள்ளிட்ட பசுந்தாள் உரமிட்டு, உழுது மார்க்கர் கருவியைக் கொண்டு 22.5 செ.மீ இடைவெளிக்கு அடையாளம் இடப்பட்டது. அங்கு சி.ஆர் 1001 எனும் ரகத்தின் நாற்றுகளை ‘ஒற்றை நாற்று’ முறையில் நடவு செய்யப்பட்டது. பின்னர், இரு வாரங்களுக்கு ஒருமுறை கோனோ வீடர் கருவியைக் கொண்டு களை நீக்கம் செய்யப்பட்டது.
அடியுரமாக இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டதால் அதன்பிறகு பயிர்களுக்கு குறைந்த அளவே உரமிடப்பட்டது. அந்த உரத்துடன் வேப்பங்கொட்டையை அரைத்து பவுடராக்கி சேர்த்து பயன்படுத்தியதால் நோய் தாக்கம் இல்லை.
பின்னர், நாராயணசாமி நாயுடு பெயரில் தமிழக அரசால் வழங்கப்படும் விருதுக்கான பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பித்தேன்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டு, வயலில் நெல் அறுவடை செய்து விளைச்சல் திறனை மதிப்பிட்டனர். ஒவ்வொரு குத்திலும் எத்தனை கிளைகள், ஒவ்வொரு கிளையிலும் எத்தனை குலை, குலைக்கு எத்தனை மணிகள் என்று ஆய்வு செய்யப்பட்டது.
அதன்டி, நான் சாகுபடி செய்திருந்த 2.5 ஏக்கரில் 14 ஆயிரத்து 451 கிலோ நெல் விளைந்திருந்தது. பின்னர், இதுவே தமிழகத்தில் அதிக விளைச்சல் என தெரியவந்தது. பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு தமிழக முதல்வர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், ரூ.5 லட்சம் வழங்கிப் பாராட்டியது பெருமையாக உள்ளது.
செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தச் செய்த வேளாண் துறை அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொழில்நுட்பத்தை அனைவரும் மிகச் சரியாகப் பின்பற்றி சாகுபடி செய்து வந்தால் உயர் விளைச்சலைப் பெறுவதோடு, லாபமும் அதிகரிக்கும் என்றார்.