

விஷத் திரவியங்களாகிய சேராங்கொட்டை, பல்லாதகம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தினாலோ, சேனைகளின் சில வகைகளிலோ ஒவ்வாமையைக் காணலாம். இதை Allergic Reaction என்று குறிப்பிடுவோம். இது அல்லாமல் ஒரு சில நிலைகளில் இயல்புக்கு மாறாக வினைபுரிந்து (Idiosyncrasy) மருந்து ஒத்துக்கொள்ளாமல் மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படுவதுண்டு. ரச ஔஷதங்கள் நாகம், வங்கம் போன்றவை சரியாகச் சுத்தி செய்யப்படாமல் போனால் சிறுநீரகப் பாதிப்புகள் வரலாம்.
சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என எதுவாக இருந்தாலும் பின்விளைவுகள் உண்டு. ஆனால், நவீன மருத்துவர்கள் மிகைப்படுத்திக் கூறுவதைப் போலச் சிறுநீரகம் செயலிழந்து போகும் அளவுக்குப் பெரிதாக எதுவும் நடப்பதில்லை.
ஒரு மருத்துவர் கவனத்துடன் செயல்பட்டால் பின்விளைவுகளைத் தவிர்க்கலாம். ஒரு கத்தியை வைத்துப் பழத்தை நறுக்கலாம். நறுக்கும்போது தவறுதலாகக் கையில் பட்டுவிடலாம் இல்லையா? பின்விளைவுகளும் அப்படித்தான்.
அதனால்தான் நோயாளிகளுக்கு வருடத்துக்கு ஒரு முறை Hb, TC, DC, ESR, Urea Creatinine, Liver Function Test, Urine Microalbumin போன்றவற்றைப் பார்க்கிறோம். இந்தப் பரிசோதனைகள் மூலம் மருந்துகளுக்குப் பின்விளைவுகள் இருக்கின்றனவா என்பதையும், கல்லீரல், சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா என்பதையும் கண்காணிக்கிறோம். நவீன மருத்துவர்களும் இதைச் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு செய்யும்போது ஆயுர்வேத மருத்துவ முறை விஞ்ஞானபூர்வமாகச் செயலாற்றுகிறது, தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. இது நடப்பதற்கு ஆயுர்வேதத் திரிதோஷ மெய்ஞான அறிவுடன், நவீன மருத்துவ விழிப்புணர்வும் சேர்ந்த ஒரு மருத்துவர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். கிடைத்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் உங்களை அணுகாது.
- ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன்