

உடுமலை: இன்றைய மாணவர்களுக்கு சமூக மாற்றங்கள் குறித்த கல்வி அறிவு கட்டாயம் தேவையென பவா செல்லதுரை தெரிவித்தார்.
உடுமலை குட்டைத்திடலில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கு.சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். உடுமலை மக்கள் பேரவைத் தலைவர் யு.கே.பி.முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரை பேசியதாவது: இன்றைய சூழலில்மாணவர்களுக்கு வகுப்பறைக்குள் கிடைக்கும் அறிவு போதாது. வகுப்பறைகளை தாண்டி சமூகத்தில் நிகழும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்த கல்வி அறிவும் கட்டாயம் தேவை.
தற்போதைய கல்வி முறை வாழ்க்கை, வரலாற்றை ஒரே மாதிரி பார்க்கவே கற்றுக்கொடுகிறது. இது தவறானது. எழுத்தாளர் எப்போதும் எளியவர்கள் பக்கமே இருப்பார். ஒருபோதும் அதிகார வர்க்கத்தின் பக்கம் இருக்க மாட்டார். அதனால் தான் எழுத்தாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நமது கல்வி முறை மனிதர்களைநேசிக்கவும் சக மனிதனிடம் நெருங்கி பழகவும் கற்றுக் கொடுக்கவில்லை. மாணவர்கள் சமூக ரீதியாக வளர்க்கப்படுவதில்லை. மனித நெருக்கம் தெரியாத சமூகத்துக்கு நாம் போய்க்கொண்டே இருக்கிறோம். ஆனால் எழுத்தாளர்கள் எப்போதும் காலத்தின் மனசாட்சியாக இருந்துகொண்டே இருக்கிறார்கள், என்றார்.