நெஞ்சம் எல்லாம்... - 21 ஆண்டு சேவைக்கு பின்பு நீக்கப்பட்ட மைக்ரோசாப்ட் ஊழியரின் பகிர்வு

பிரசாந்த | படம்: சமூக வலைதளம்
பிரசாந்த | படம்: சமூக வலைதளம்
Updated on
1 min read

தொழில்நுட்ப உலகில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதில் ஒருவர்தான் இந்தியரான பிரஷாந்த். இவர் அந்நிறுவனத்தில் 21 ஆண்டு காலம் பணியாற்றியவர். பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தனது மன ஓட்டத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்தவர்கள் என சொல்லலாம். மெட்டா, ட்விட்டர், மைக்ரோசாப்ட் என அனைத்தும் இதில் அடங்கும்.

அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 5 சதவீதத்தினரை பணி நீக்கம் செய்தது. இதன் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம் பேர். பணி நீக்கத்திற்கு ஆளானவர்களில் பிரசாந்தும் ஒருவர்.

“நான் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் பெற்றேன். இந்நேரத்தில் எல்லாவற்றையும் விட நன்றி உணர்வை மட்டுமே என்னால் அதிகம் உணர முடிகிறது. பட்டம் முடித்த கையோடு இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். அயலகம் குறித்த எதிர்பார்ப்பு, அச்சம் என அனைத்தையும் எனது ஆரம்ப நாட்களில் கடந்தேன். ஆண்டுகளாக பார்த்தால் மைக்ரோசாப்ட் உடனான எனது பயணம் 21 ஆண்டுகள்தான். ஆனால், பல்வேறு பொறுப்புகளை கவனித்த காரணத்தால் பலவற்றை கற்றுக் கொள்ள முடிந்தது. இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

திறன் வாய்ந்த, ஸ்மார்ட்டான மனிதர்களுடன் இந்த பயணம் அமைந்திருந்தது. அனைவருக்கும் நன்றி. எனது குடும்பத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் யாருக்கேனும் மென்பொருள் மேலாண்மை சார்ந்த பணிக்கு ஆட்கள் தெரிவு செய்வது தெரிந்தால் என்னிடம் சொல்லவும்” என லிங்க்ட்இன் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in