

ராமேசுவரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சீக்கியர்கள் ராமேசுவரத்தில் மகர சங்கராந்தி பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடினர்.
சீக்கிய மதத்தின் நிறுவனரும், 10 சீக்கிய குருக்களில் முதல் குருவுமான குருநானக் 1469-ம் ஆண்டு பிறந்தார். கவிஞராகவும், சமூக மாற்று சிந்தனையாளராகவும் திகழ்ந்த இவர், இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றதோடு மட்டுமின்றி, அரபு நாடுகளுக்கும், இலங்கைக்கும் சென்று அன்பை போதித்தார்.
குருநானக் இலங்கையில் பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக 10 சமஸ்கிருத மொழியிலான கல்வெட்டுகள் அண்மையில் மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்டன. இலங்கை செல்லும் வழியில் குருநானக் 1511-ம் ஆண்டு ராமேசுவரத்தில் தங்கியிருந்தார். இதை நினைவுகூரும் வகையில் ராமேசுவரத்தில் 1885-ம் ஆண்டில் குருத்துவாரா நிறுவப்பட்டது.
இந்நிலையில் அறுவடைத் திருவிழாவான மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்கு தமிழகத்தில் வசிக்கும் சீக்கியர்கள் ராமேசுவரம் தபால் நிலையம் அருகே உள்ள குருத்வாராவில் கடந்த சனிக்கிழமை மாலை திரண்டனர். அங்கிருந்து 100-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
இந்த ஊர்வலத்துக்கு பாஞ்ச் பியாரே எனச் சொல்லப்படும் ஐவர் கொண்ட குழுவினர் கையில் கொடி மற்றும் வாள்களை ஏந்தி தலைமை வகித்து நடத்தினர். நகர் கீர்த்தன் குழுவினர் சீக்கிய சமயப் பாடல்களைப் பாடியவாறு சென்றனர். ராமநாத சுவாமி கோயிலின் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து மீண்டும் குருத்வாராவை ஊர்வலம் வந்தடைந்தது.
மகர சங்கராந்தியின் முக்கிய நிகழ்வான சொக்கப்பனைபோல் தீ மூட்டி சுற்றி பாங்க்ரா நடனமாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு குருத்வாராவில் நடைபெற்றது. குருத்வாரா சமூக சமையலறையில் தயாராகிய ரொட்டி, இனிப்புகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் பரிமாறப்பட்டது.
இது குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வசிக்கும் அரசு பணியில் இருக்கும், வியாபாரத்தில் ஈடுபடும் சீக்கியர்கள் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் ராமேசுவரம் குருத்வாராவில் கூடி பஞ்சாபிகளின் அறுவடை திருநாளான மகர சங்கராந்தியை கொண்டாடுகின்றனர்.
ராமேசுவரத்தில் குருநானக் தங்கியிருந்ததை நினைவுகூரும் வகையிலும் இந்நிகழ்வை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் இருக்கும் சீக்கியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தி தருகிறது என்று கூறினர்.