

மதுரை: ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் வேளையில், மதுரையில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்த சென்ட்ரல் சினிமா திரையரங்கம் குறித்து பார்ப்போம்.
உலகப் பொதுமறையான திருக்குறளில், திருவள்ளுவர் சொல்லாத விஷயங்களே இல்லை. அக்காலம் தொடங்கி தற்காலம், எதிர்காலம் என எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துகள் திருக்குறளில் உள்ளது. அத்தகைய திருவள்ளுவருக்கு மதுரையில் சென்ட்ரல் சினிமா திரையரங்கம் சிலை வைத்து பெருமை சேர்த்துள்ளது.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சமூக நலத்துறை மாவட்ட மறுவாழ்வு அதிகாரியும், சினிமா விமர்சகருமான கு.கணேசன் (வயது 70) கூறும்போது, "மதுரையில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் 1939-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. கல்கத்தா மெட்ரோ தியேட்டர் மாதிரி பெண்களுக்கு மட்டும் தனியாக 352 இருக்கைகள் உள்பட 1732 இருக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இத்தகைய பெருமைக்குரிய திரையரங்கில் தமிழ்ப்பற்று காரணமாக திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த திரையங்கிலும் திருவள்ளுவருக்கு சிலை இல்லை. 1960-ம் ஆண்டு வெளியான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கதை வசனத்தில் நடிகர்கள் ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ படத்தில் திருவள்ளுவரையும், திருக்குறளையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டது.
அதன் வெளிப்பாடாக சென்ட்ரல் சினிமா திரையரங்கில் சிலை நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை திருவள்ளுவர் சிலை பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரை அவரது பிறந்தநாளில் வணங்குவோம்" என்றார்.