

மதுரை: மதுரையில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு (ஜனவரி 16) ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் காளையின் உரிமையாளருக்கு கன்றுடன் நாட்டின பசுமாடு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார் அலங்காநல்லூர் பொறியாளர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் பொன்.குமார் (38), மின்னணுவியல் பொறியாளரான இவர், பசுமை நண்பர்கள் அமைப்பு மூலம் இயற்கையை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று முதல் பரிசு வெல்லும் காளையின் உரிமையாளருக்கு கன்றுடன் நாட்டின பசுமாடு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். தற்போது 4-வது ஆண்டாக தொடர்ந்து வழங்கவுள்ளார்.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலரும், மின்னணுவியல் பொறியாளருமான பொன்.குமார் கூறும்போது, “தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டின் பாரம்பரியம் தொடர நாட்டு மாட்டினங்கள் அவசியம். அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசுபெறும் காளையின் உரிமையாளருக்கு கன்றுடன் நாட்டின பசுமாடு வழங்கி வருகிறேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2017ம் ஆண்டில் வழங்கினேன்.
முதல் பரிசாக கார், பைக் என வணிகரீதியாக மாறியதால் அங்கு தவிர்த்துவிட்டு, 2020ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறேன். தற்போது 4-ம் ஆண்டாக வழங்கவுள்ளேன். தற்போது கடைப்பல் முளைத்த, 2வது ஈன்ற காங்கேயம் காளையும், 10 நாள் கன்றுக்குட்டியுடன் வழங்கவுள்ளேன்.
வீட்டுக்கொரு நாட்டின பசுமாடு வளர்ப்போம், வீரத்தமிழரின் அடையாளர் காப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கி வருகிறேன். இதேபோல், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் அமைப்பினரும், கார், பைக் என பரிசு வழங்குவதற்கு மாற்றாக நாட்டின மாடுகளை பரிசாக வழங்க முன்வந்தால் நாட்டின மாடுகளின் எண்ணிக்கையை பெருக்கலாம். அப்போதுதான் நமது ஜல்லிக்கட்டை பாதுகாக்கலாம்” என்றார்.