

உதகை: இன்று சுவாமி விவேகானந்தரின் 161-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு உதவியாளராக இருந்த ஆங்கிலேயர் ஜே.ஜோஸ்வா குட்வினின் அரும்பணிகளை ‘மானஸ்’ அமைப்பு நிறுவனர் சிவதாஸ் நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இங்கிலாந்தில் 1870-ம் ஆண்டுபிறந்தவர் ஜே.ஜோஸ்வா குட்வின்.இவர், சுவாமி விவேகானந்தரை சந்திக்கும் வரை எந்த குறிக்கோளும்இல்லாமல் எழுத்தாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1895-ல் சுவாமி விவேகானந்தரின் உரையை பதிவு செய்ய ஸ்டெனோகிராபர் பணிக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்து, அப்பணியில் சேர்ந்தார்.
விவேகானந்தரின் உரையை கேட்ட அவர், சம்பளம் வாங்க மறுத்துவிட்டார். சுவாமி விவேகானந்தர் ஆன்மிகத்துக்காக தன்னையே அர்ப்பணித்துள்ள நிலையில், நான் எனது சேவையை அவரின் பணிக்காக அர்ப்பணிக்கிறேன் என்று உறுதியாக வாழ்ந்தார்.இவர் 1837-ல் இங்கிலாந்தில் அறிமுகமான நியூபிட்மன் முறையில் (சுருக்கெழுத்து) தனித்துவம் பெற்று விளங்கினார்.
சுவாமி விவேகானந்தரை நிழல்போல் தொடர்ந்த குட்வின், விவேகானந்தரின் ஆன்மிக உரைகளின் தாக்கத்தால் சைவ உணவுக்கு மாறினார். சுவாமி விவேகானந்தரின் உரை முடிந்தபின் குட்வின் உரையின் தன்மைகளை விளக்கும்போது விவேகானந்தரே அதைக்கேட்டு ஆனந்தப் படுவார். விவேகானந்தரின் சொற்பொழிவுகளை உட்கருத்து மாறாமல் பதிவு செய்வது குட்வினின் வழக்கம்.
இவ்வாறு சுவாமி விவேகானந்தரின் வாழ்வின் ஒவ்வொரு பயணத்திலும் குட்வின் பங்கு இருந்தது. ஜம்மு, லாகூர் போன்ற இடங்களில் விவேகானந்தரின் சொற்பொழிவுகளை பதிவு செய்தார். பின்னர் ஜப்பானில் சொற்பொழிவாற்ற சென்ற சுவாமி விவேகானந் தரும், குட்வினும் அதன் பின் சந்திக்கவே இல்லை. சென்னையில் தனது சகோதரி நிவேதிதாவுடன் இணைந்து ஆன்மிக பணியை குட்வின் தொடர்ந்தார்.
சென்னையில் அதிகமான வெயில் காரணமாக குளிர் பிரதேசமான உதகைக்கு வந்த குட்வினின், உடல் நிலை பாதிக்கப்பட்டது. 1898-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது 28-வது வயதில் அவர் மரணமடைந்தார். இவரது உடல், உதகை தாமஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. குட்வின் நினைவாக 1967-ல் இக்கல்லறையில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டு, அதன் நான்கு புறமும் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும்விவேகானந்தரின் பிறந்த தினத்தன்று குட்வினின் கல்லறையில் ராமகிருஷ்ண மடத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.