

மதுரை: ஜல்லிக்கட்டில் காளைகளை களமிறக்குவதில் ஆண்களுக்கு இணையாக மதுரை பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாடிவாசலில் காளைகளை அடக்கும் வீரர்கள், களம் இறக்கும் உரிமையாளர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள், பார்வையாளர்கள் வரை பெரும்பாலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
ஆனால், வீடுகளில் காளைகளைப் பெண்களே பராமரிக்கிறார்கள். அவர்கள் வீட்டில் வளரும் காளைகளோடு பழகி வருவதால் காலப்போக்கில் ஆண்களைப்போல காளைகளை அச்சமின்றி அணுகும் துணிச்சல் வந்துவிடுகிறது. அதனாலேயே மதுரை பகுதிகளில் பெண்களும் ஜல்லிக்கட்டுக் காளைகளை அதிகம் வளர்க்கத் தொடங்கி விட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் கடந்த ஆண்டு ஒரு பெண் அவிழ்த்துவிட்ட காளை சிறப்பாக விளையாடியது. கடைசியில் வீரர் ஒருவர் அக்காளையை அடக்கினார். பிடிமாடாக அறிவிக்கப்பட்டாலும், ஒரு பெண் இதுபோன்று காளையை பராமரித்து பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டில் களமிறக்கியுள்ளார் என்பதற்காக அவருக்கு சிறப்புப் பரிசு போட்டி ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்பெண் பரிசுப் பொருள் முக்கியம் அல்ல. அனுதாபத்தாலோ, பெண் என்பதாலோ வழங்கப்படும் இப்பரிசு எனக்கு அவசியம் இல்லை. அடுத்த முறை மீண்டும் காளையை களமிறக்கி பரிசை வெல்வேன் எனப் பரிசைப் பெறாமல் சென்றார். பெண்கள் மட்டும் அல்லாது திருநங்கைகளும் தற்போது ஜல்லிக்கட்டு காளைகளை ஆர்வமாக வளர்த்து வருகிறார்கள். பட்டதாரி பெண்களும் காளைகளை வளர்க்கிறார்கள். பெண் உரிமையாளர்கள் காளைகளிடம் காட்டும் அன்பும், பரிவும் அலாதியானது.
ஊரே காளைகளை கண்டு அஞ்சினாலும், காளைகளை வளர்க்கும் வீடுகளில் சிறு குழந்தைகள்கூட பயமின்றி அருகில் செல்கிறார்கள். வாய் பேசமுடியாத அந்த ஜீவனின் பசி, வலி, வேதனை, பயம், கோபம், தேவை அனைத்தையும் குறிப்பால் உணர்ந்து குழந்தைபோல வளர்த்து வருவதாலேயே இவர்களிடம் காளைகள் பரிவு காட்டுகின்றன.