

ராமநாதபுரம்: பெண்களுக்கு பாதுகாப்பு, அதி காரம் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 25,000 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பிரதேச இளம்பெண் நேற்று ராமநாதபுரம் வந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நாட்டாராம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா மால்வியா(24). தேசிய மலையேறும் வீராங்கனையான இவர் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் அதிகாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 1-ல் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பயணத்தைத் தொடங்கி, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா வழியாக 7-வது மாநிலமாக தமிழகம் வந்துள்ளார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் வழியாக நேற்று ராமநாதபுரம் வந்தார். அவரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி பி.தங்கதுரை ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர் ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றார். ஆஷா மால்வியா(24) கூறுகை யில், நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தவறாக கூறி வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை நிரூபிக்க தனி ஆளாக சைக்கிள் மூலம் நாட்டைச் சுற்றி வருகிறேன். வரும் ஆக.15-ல் டெல்லியில் சுற்றுப் பயணத்தை முடிக்க உள்ளேன், என்றார்.