

சென்னை: இந்து மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆன்மிகச் சொற்பொழிவாற்றலில் சிறந்து விளங்குகிறார் புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவச் சுடராழி டி.ஏ.ஜோசப் (71).
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஜோசப், தனது 15 வயதில் இந்து மதத்தின் மீது காதல் வயப்பட்டார். அந்த தேடலின் தொடர்ச்சியாக, இந்து மத கொள்கைகளையும், சிறப்புகளையும் போதிக்கும் நற்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தற்போது இந்துக்களுக்கான ஆன்மிக சொற்பொழிவுகளை தமிழகமெங்கும் வழங்கி வருகிறார். இதுவரை இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார். குறிப்பாக 3 ஆயிரம் வேதாந்த குறுந்தகடுகளையும் வெளியிட்டு, பேரார்வத்துடன் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
பாராட்டு பெற்ற நூல்கள்
தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதத்தில் இலக்கிய பட்டப் படிப்பை முடித்தவர் ஜோசப். இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர். முதலில், மதுரையில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். முதன்முதலாக 1991-ல் இவர் எழுதிய ‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டியா’ என்ற புத்தகம், காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட தமிழகத்தின் பல மடாதிபதிகளால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து, 12 ஆழ்வார்களை பற்றி இவர் எழுதிய ‘கடவுளை காட்டும் கண்ணாடிகள்’ புத்தகமும் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றது.
2017-ல் இளைஞர்களுக்கு ஆன்மிகத்தை போதிக்கும் வகையில் ரிஷிதர்மா பவுண்டேஷனை நிறுவினார். இந்த அமைப்பில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவரது ஆன்மிக சேவையை கவுரவித்து, ‘சொற்செல்வன்’ உட்பட 50-க்கும் மேற்பட்ட பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டி.ஏ.ஜோசப் கூறியதாவது:
மோட்ச நிலையை அடைவது தொடர்பாக எனது 10 வயதில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதற்கான விடையை பல்வேறு மதங்களில் தேடியும், திருப்திகரமான விளக்கம் கிடைக்கவில்லை. நிறைவாக, ஸ்ரீமான் வீரராகவ ஐயங்கார் மூலம் இந்து மதத்தில் என் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான விளக்கம் கிடைத்தது. அதனால், இந்து மதத்துக்கு மாறி என்னை அர்ப்பணித்துக் கொள்ள முடிவெடுத்தேன்.
இந்த சூழலில், கோயில்களில் ராமாயண, மகாபாரதக் கதைகளை கூறும் வாய்ப்பு கிடைத்தது. எனது 28 வயது முதல், இந்து மதத்தின் நற்கருத்துகளை ஆன்மிகச் சொற்பொழிவு வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை முன்னெடுத்து வருகிறேன்.
வாழ்வுக்கான அர்த்தங்கள் இந்து மதத்தில் உள்ளது. எனவே, நான் திருப்தியடைந்த ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டு செல்ல மனம் விரும்புகிறது.
இளைஞர்களுக்கும் ஆன்மிகம் சென்றடையும் வகையில் சமூகநீதியுடன் கதைகளை நான் விவரிப்பதால், எனது சொற்பொழிவு சற்று வித்தியாசமாக இருக்கும்.
நான் மதம் மாறிவிட்டாலும்கூட, ஸ்ரீ வைகுண்டவாசி ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் சுவாமி அறிவுறுத்தலின்படி ஜோசப் எனும் பெயரிலேயே சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.