

ராமநாதபுரம்: வறட்சிப் பகுதியான கமுதியில் முதல் முறையாக காலிபிளவர் சாகுபடி செய்து பொறியியல் பட்டதாரி சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி என அழைக்கப்படுவது தொடர்கிறது. இந்த மாவட்டத்தில் அதிக அளவில் நெல் பயிர், அடுத்ததாக பருத்தி, மிளகாய், சோளம், நிலக்கடலை, எள், உளுந்து எனக் குறிப்பிட்ட மானவாரி பயிர்கள் மற்றும் சில தோட்டக்கலை பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
இதில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய பகுதி விவசாயிகள் ஆழ்துளை கிணறு, பண்ணைக் குட்டைகள் அமைத்து, சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் குறைந்த அளவு தண்ணீர் செலவாகும் வகையில் தோட்டக்கலைப் பயிர்கள், காளான் வளர்ப்பு உள்ளிட்ட மாற்று விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கமுதி அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் மகன் சுரேஷ்(29) என்பவர் மாவட்டத்தில் முதல் முறையாக மலைப் பயிர்களான காலிபிளவர், முள்ளங்கி ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் ஆறு ஆண்டுகள் சென்னையில் உள்ள ஐ போன் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் விவசாயத்தில் உள்ள ஆர்வத்தால் சொந்த ஊருக்கு வந்து காலிபிளவர் பயிரிட்டு சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து சுரேஷ் கூறியதாவது: சொந்த ஊரில் 10 ஏக்கரில் தந்தை விவசாயம் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக நானும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். பரமக்குடியில் உள்ள நண்பரின் ஆலோசனையின்பேரில் தனியார் கடையில் காலிபிளவர் விதைகளை வாங்கி 1 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். மேலும் சோதனை அடிப்படையில் முள்ளங்கி, கேரட், சேனைக்கிழங்கு, பீட்ரூட் ஆகிய தோட்டக்கலைப் பயிர்களையும் நடவு செய்துள்ளேன்.
காலிபிளவர், முள்ளங்கி ஆகியவை 60 நாட்களில் மகசூல் கிடைத்துவிடும். குறைந்த நாட்களில் அதிக லாபம் தரக்கூடிய பயிராகும். இதற்கு செலவும் அதிகமில்லை. பூச்சி மருந்து அடிக்கத் தேவையில்லை. இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் போதும்.
விளைவித்த காலிபிளவர்களை கமுதி, அருப்புக்கோட்டை, பரமக்குடியில் விற்பனை செய்கிறேன். வெயிலால் காலிபிளவர் பாதிக்கப்படாமல் இருக்க தோட்டக்கலைத் துறையினர் பசுமைக்குடில் போன்ற வசதிகளை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். மாவட்டத்தில் மற்ற விவசாயிகளும், இதுபோன்ற மலைப்பிரதேச பயிர்களைப் பயிரிட்டு லாபம் ஈட்டலாம் என்றார்.