

புதுச்சேரி: புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பயனற்ற பொருட்களில் இருந்துபயனுள்ள பொருட்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக விளங்கி வருகின்றனர்.
பனை, தென்னை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பாய்மரக் கப்பல், சிறுசைக்கிள், விலங்குகளின் மாதிரிகள், ஆபரணங்கள் என செய்துவந்தனர். இதை பல கண்காட்சிகளில் வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய இப்பள்ளி மாணவர்கள், திருச்சி,சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு கலை வகுப்புகளையும் எடுத்து வருகின்றனர்.
தங்களின் கலைப் படைப்பின் அடுத்த கட்டமாக, மூங்கிலைக் கொண்டு கலைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். மூங்கில் மூலம் சிறு சைக்கிள், இருக்கை, லைட் ஹவுஸ்,ஊஞ்சல், நாற்காலி, அன்பளிப்பு பொருட்களை செய்து வருகின்றனர்.
இந்த கலை முயற்சியின் ஒரு பகுதியாக, அவதார் திரைப்பட பாத்திரங்களின் உருவங்களை இப்பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதுபற்றி மாணவர்கள் கூறுகையில், "எங்கள் பள்ளியில் ‘அழிவின் உயிர்ப்பு’ என்ற கலைக்கூடம் இயங்கி வருகிறது. இக்கலைக் கூடத்தின் மூலம் ஏராளமான கலைப் பொருட்களை செய்துவைத்துள்ளோம். நம்மைச் சுற்றிலும் கிடைக்கும் எளிய இயற்கை பொருட்களைக் கொண்டே இக்கலைப் பொருட்களை உருவாக்க வேண்டும் என்பது இலக்கு. எங்கள் பள்ளி ஆசிரியர் உமாபதி, இதற்கான செய்முறையை கற்று தந்து, எங்களை வழிகாட்டி வருகிறார்.
எங்கள் அனைவருக்கும் பிடித்த படம் ‘அவதார்’. தற்போது ‘அவதார் 2’ திரைப்படம் வந்துள்ளது. அதையொட்டி, அப்படத்தின் பாத்திரங்களை, உருவாக்கத் தொடங்கினோம். தென்னை மர பட்டை, தேங்காய் குரும்பு, மூங்கில், மந்தாரை இலை இவற்றைக் கொண்டு இந்த உருவங்களை உருவாக்கியுள்ளோம். இதைச் செய்ய எங்களுக்கு ஒரு வாரம் ஆனது" என்றனர்.
இதுபற்றி கவிஞரேறு வாணிதாசன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்,"எங்கள் பள்ளி மாணவர்கள் படிப்புடன், இந்த கலை சார் விஷயங்களில் ஆர்வத்துடன் இருப்பது எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது. இதனால் இவர்கள் கற்றல் சார்ந்த திறனும், நுண்கலைத் திறனும் கூடுவதை எங்களால் காண முடிகிறது” என்று கூறி, அங்கு வடிவமைக்கப்பட்டு வைத்திருந்த, ‘அவதார் 2’ திரைப்பட நாயகன், நாயகி, அதில் வரும் டிராகன் உள்ளிட்ட உருவங்களை காட்டினர். இப்பயிற்சிகளால் மாணவர்கள் கற்றல், நுண்கலைத் திறன் கூடுகிறது.