

திண்டுக்கல்: தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்' மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் இன்று தொடங்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த திட்டத்தை இன்று மாலை திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நூலக நண்பர்கள் திட்டத்தின் கீழ் நூலகத்துக்கு வரமுடியாத மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், புத்தக ஆர்வலர்கள், குழந்தைகள், மாணவர்கள். குடும்பத் தலைவிகள், மருத்துவமனை உள்நோயாளிகள் ஆகியோரை தேடி இருக்குமிடத்துக்கே சென்று நூல்களை வழங்கி வாசிப்பை ஊக்குவிக்க உள்ளனர்.
நூலகத்துக்கு 5 பேர்: நூலகத்துக்கும், வீடுகளுக்கும் நூல்களை கொண்டு செல்லும் சேவை பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட உள்ளனர். நூலகத்தில் தொடர்ந்து வாசகர்களாக இருப்பவர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்கள் நூலக சேவையில் விருப்பம் உள்ளவர்கள் நூலக நண்பர்கள் ஆகலாம்.
ஒரு நூலகத்துக்கு 5 பேர் நூலக நண்பர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில், நூலகத்துக்குட் பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இல்லம் தேடிச் சென்று நூல்களை வழங்கி சேவை ஆற்றுவர். நூலக நண்பர்களுக்கு அடை யாள அட்டை நூலகரால் வழங்கப் படும். இல்லங்களுக்கு நூல்களை கொண்டு செல்ல பை வழங்கப்படும். 25 நூல்களும் வழங்கப்படும். அந்த நூல்கள் இல்லங்களுக்கு சென்று தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படும்.
மக்கள் அந்த நூல்களை 15 நாள் அவகாசத்தில் படித்துவிட்டு, நூலக நண்பர்களிடமே திரும்ப கொடுத்து வேறு நூல்களை பெற்றுக் கொள்ளலாம். நூலகத்துக்கு வர முடியா தவர்கள், வாசிக்கும் தேவை உள்ளவர்கள், தேடி வரும் நூலக நண்பர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும் நோக்கில் பொது நூலக துறையின் சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்' தமிழக அரசால் தொடங்கப் பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள 31 மாவட்ட மைய நூலகங்கள், 300 முழுநேர கிளை நூலகங்கள், 1463 கிளை நூலகங்கள். 706 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 2,500 நூலகங்களில் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டம் திண்டுக்கல் மாவட்ட நூலகத்துறை சார்பில் இன்று தொடங்கப்படுகிறது. மாவட்டத்தில் நூலக நண்பர் களாக சேவையாற்ற 300 பேர் முன்வந்துள்ளனர்.
அவர்களுக்கு இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அடையாள அட்டையும், பையும் வழங்குகிறார்.