நேர்மைக்குக் கிடைத்த கவுரவம்: ஒருநாள் தலைமையாசிரியராக செயல்பட்ட 7-ம் வகுப்பு மாணவி

தலைமையாசிரியர் இருக்கையில் அமர்ந்துள்ள மாணவி பா.தனுஷ்.
தலைமையாசிரியர் இருக்கையில் அமர்ந்துள்ள மாணவி பா.தனுஷ்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் கிடந்த ரூ.2,500-ஐ ஒப்படைத்த 7-ம் வகுப்பு மாணவியின் நேர்மையைப் பாராட்டும் வகையில், பள்ளித் தலைமையாசிரியை உள்ளிட்டோர், அந்த மாணவியை தேசிய கொடியேற்ற வைத்து, ஒரு நாள் தலைமையாசிரியராக பணியில் அமர்த்தி கவுரவப்படுத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள அரசுநிலைப்பாளையத்தில், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஏழை, எளிய, விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 247 மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியை கவிதா உட்பட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், டிச.7-ம் தேதி 7-ம் வகுப்பு மாணவி பா.தனுஷ்ஸ்ரீ, தனது வகுப்பறையில் கீழே கண்டெடுத்த ரூ.2,500-ஐ, வகுப்பாசிரியை சரோஜாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பணத்துக்கு மாணவிகள் யாரும் உரிமைக் கோரவில்லை. இதைத்தொடர்ந்து, அதே வகுப்பைச் சேர்ந்த மாணவி நாகஜோதியின் புத்தகத்தில், அவரது தாய்வைத்திருந்த பணம் அது என்பது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, அவர் பள்ளிக்குச் சென்று பணத்தைப் பெற்றுக் கொண்டதுடன், தனுஷ்ஸ்ரீ-யைப் பாராட்டினார்.

இந்தநிலையில், மாணவி தனுஷ்ஸ்ரீயின் நேர்மையைப் பாராட்டும் வகையில், பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்டோர், டிச.12-ம் தேதி பள்ளியில் தனுஷ்யை தேசிய கொடி ஏற்ற வைத்ததுடன், அன்று ஒரு நாள் தலைமையாசிரியராக பணியில் அமரவைத்து கவுரவப்படுத்தினர்.

இது குறித்து பள்ளித் தலைமையாசிரியை கவிதா, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘நேர்மையைக் கடைப்பிடித்தால் உயர்ந்த நிலைக்குச் செல்லலாம் என்பதை பிற மாணவிகளும் உணரும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் மாணவி தனுஷ்ஸ்ரீக்கு ஒரு நாள் தலைமையாசிரியர் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது’’ என்றார்.

டிச.7-ம் தேதி வகுப்பறையில் கண்டெடுத்த ரூ.2,500-ஐ, மாணவி பா.தனுஷ்ஸ்ரீ எடுத்துச் சென்று வகுப்பாசிரியை சரோஜாவிடம் ஒப்படைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in