

புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமென்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகின்றன.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமென்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் 3-வது பெரிய நாடாக இருக்கும். முதல் இரண்டு இடத்தில் இருப்பது சீனாவும், அமெரிக்காவும்தான்.
நெதர்லாந்து சூழலியல் மதிப்பீடு முகமையின் தகவலின்படி 2017-ம் ஆண்டு மட்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட சிமென்டின் அளவு 4000 மில்லியன் டன்களுக்கு மேல். குறிப்பாக ஆசியாவில்தான் அதிகளவு சிமென்ட் பயன்படுத்தப் படுகிறது. செங்கற்களும் அப்படிதான். செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 1.5 ட்ரில்லியன் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகிறது 2015-ம் ஆண்டு ஆய்வு.
செங்கல் உற்பத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன். அப்படியானால் இங்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உலகெங்கும் சிமென்ட், செங்கல் இல்லாமல் அல்லது குறைவாக பயன்படுத்தி வீடுகளை கட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தியாவிலும் மாற்று வீடுகள் குறித்த பேச்சுகள் பொதுமக்களிடம் இருந்து வருகின்றன.
குறைந்தளவு சிமென்ட் வைத்து வீடுகள் கட்டுவது எப்படி? எப்போதும் வெளிச்சம் நிறைந்திருக்கும் வீடுகளை எப்படி வடிவமைப்பது? என மாற்று வீடுகள் குறித்து பலர் யோசித்து செயல்பட்டு வருகிறார்கள். "வீடுகள் எப்படி கட்ட வேண்டு மென்பதை நாம் பழங்குடிகளிடம் தான்கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ, அதனைக் கொண்டு மட்டுமே அவர்கள் வீடு கட்டுவார்கள். காற்றோட்டமான, வெளிச்சம் புகும் வீடுகள் அவர்களுடையது" என்கின்றனர் மாற்று வீடு கோரிக்கையை முன் வைப்பவர்கள்.
நகரத்தில் அதுபோல வீடுகளைக் கட்டுவதில் சில இடர்பாடுகள் உள்ளன” என்றும் கூறுகின்றனர். ஏதாவது காட்டில் அல்லது பண்ணை வீட்டில் மட்டுமே மூங்கில் வீடுகள் சாத்தியம். எல்லா இடங்களிலும் இது போன்ற வீடுகளை கட்ட முடியாது என்ற பொதுக்கருத்து நிலவுகிறது. ஆனால் கேரளாவில் மூங்கில் வீடுகள் அதிகளவில் கட்டப்படுகின்றன.
”வீடு என்பது வாழ்க்கை முறை சார்ந்தது. எப்படியான வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச் செல்கிறோம் என்பதற்கான சாட்சி இந்த வீடுகள். அது இயற்கையுடன் இயைந்ததாக இருக்க வேண்டும். 1800 விதமான மூங்கில் இனங்கள் உள்ளன. நாம் இருக்கும் இடத்தின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மூங்கில்களை தேர்ந்தெடுத்து நாம் வீடு கட்டிக் கொள்ளலாம். நிச்சயம் இவை நிலைத்து நிற்கக் கூடியவை” என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.