மறைந்த முன்னாள் மாணவர் விருப்பப்படி பென்னாகரம் அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

மறைந்த முன்னாள் மாணவர் விருப்பப்படி பென்னாகரம் அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

தருமபுரி: பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மறைந்த முன்னாள் மாணவர் சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். இப்பள்ளியில் பயின்று மருத்துவரான இன்பவாழ்வு (75) என்பவர் அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இருதயவியல் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் அண்மையில் அவர் உயிரிழந்தார். உயிரிழக்கும் முன்பாக அவர், தான் படித்த பென்னாகரம் அரசுப் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என தன் மனைவியிடம் கூறியுள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பென்னாகரம் அரசுப் பள்ளிக்கு அவர் சார்பாக ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை, நஞ்சையா-பொன்னம்மாள் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் தியாகராஜன் நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனிடம் வழங்கினார். பள்ளி வளாகத்தில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை இந்த நிதி மூலம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினரான கிராம கல்வி குழு தலைவர் மலர்விழி, மூத்த ஆசிரியர் முனியப்பன், உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர் வீரன், தமிழ் ஆசிரியர் பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in