

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதில்:2020-ம் ஆண்டில் 13,92,179 பேர் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரும் காலங்களில் 12.8 சதவீதம் அதிகரிக்கலாம் என்று தேசிய புற்றுநோய் பதிவுத் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயாளிகளுக்கு பல்வேறு அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் நிதியாண்டில் கடந்த 5-ம் தேதி வரை 40 பேருக்கு ரூ.2.16 கோடி செலவில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு நிதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 64 பேருக்கு ரூ.5.85 கோடி நிதியும், 2019-20-ம் நிதியாண்டில் 196 பேருக்கு ரூ.15.72 கோடி நிதியும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.