

சிதம்பரத்தில் வடையால் வளர்ந்த கடையின் 4-ம் ஆண்டு வடை தினத்தையொட்டி பொதுமக்களுக்கு இலவசமாக 11 ஆயிரம் வடைகள் வழங்கப்பட்ட ருசிகரமான சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 50-ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரது கடையில் விற்பனை செய்யப்படும் வடையை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்து வடையை வாங்கி சென்றுள்ளனர். அப்படி வடையை விற்று வளர்ந்த கடை இன்று சண்முகவிலாஸ் என்ற பெரிய சுவிட் கடையாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு இந்த கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் உயிரிழந்தார்.
இதனையடுத்து டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமையில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வடையால் வளர்த்த கடையின் நிறுவனர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ‘வடை தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வடைதினத்தில் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு வடையை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு (டிச.2) சனிக்கிழமை 4-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கடையின் வாயிலில் வடைதினம் அனுசரிக்கப்பட்டது. வடைதினத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ரூ.7 மதிப்புள்ள வடை இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 2-ம் தேதி காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை 11 ஆயிரம் வடைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஒருவர் எத்தனை வடை வேண்டுமனாலும் அதே இடத்தில் சாப்பிடலாம். ஆனால் பார்சல் எடுத்துபோக அனுமதி இல்லை. இந்நிகழ்ச்சியில் கடையின் உரிமையாளர் கணேஷ் மற்றும் கடையின் ஊழியர்கள் கலந்து கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வடைகளை வழங்கினார்கள்.
இதனையறிந்த சிதம்பரம் வர்த்தக சங்க நிர்வாகிகள் சிவராமவீரப்பன், முரளி, அப்துல்ரியாஸ், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தோப்பு சுந்தர், சுரேஷ் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் கடையை நிறுவிய ஸ்ரீநிவாச ஐயர் படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்கள். இப்பகுதி மக்களால் இந்த கடை., வடையால் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. அவர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் எவ்வளவு செலவு ஆனாலும் இலவசமாக வடையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக கடையின் உரிமையாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.