உலகின் மிக செலவினம் மிகுந்த நகரங்கள்: நியூயார்க், சிங்கப்பூர் பட்டியலில் இடம்பிடிப்பு

உலகின் மிக செலவினம் மிகுந்த நகரங்கள்: நியூயார்க், சிங்கப்பூர் பட்டியலில் இடம்பிடிப்பு
Updated on
1 min read

நியூயார்க்: உக்ரைன்-ரஷ்ய போர், பொருட்கள் மற்றும் சேவை விநியோகத்தில் எழுந்துள்ள சிக்கல் உள்ளிட்ட காரணிகளால் கடந்த ஓராண்டில் உலகின் முக்கிய 172 நகரங்களில் வாழ்க்கை செலவினம் சராசரியாக 8.1 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிங்கப்பூர், அமெரிக்காவின் நியூயார்க் நகரங்கள் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதையடுத்து, இஸ்ரேலின் டெல் அவிவ், சீனாவின் ஹாங்காங், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள் உள்ளன. இவைதவிர, ஸ்விட்சர்லாந்தின் ஜூரிஷ், ஜெனீவா, சான்பிரான்சிஸ்கோ, பாரிஸ், கோபெகன், சிட்னி ஆகிய நகரங்கள் வாழ்க்கை செலவினம் அதிகரித்த முதல் 10 நகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதேநேரத்தில், சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் லிபியாவின் திரிபோலி நகரங்கள் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கை செலவினம் சராசரியாக 4.5 சதவீதம் மட்டுமே உயர்ந்ததையடுத்து செலவுமிகுந்த நகரங்களில் பட்டியலில் ஆசியாவைச் சேர்ந்த சில முக்கிய நகரங்கள் இடம்பெறவில்லை.

இதுகுறித்து எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் அதிகாரி உபாசனா தத் கூறியது: உக்ரைன் போர், ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை ஆகியவை விநியோகச் சங்கிலித் தொடரில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.

அதனுடன் இணைந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், நாணய பரிமாற்ற விகித மாறுபாடு ஆகியவை உலகம் முழுவதும் வாழ்க்கைச் செலவின நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு குறியீட்டில் அதன் தாக்கத்தை நாம் உணரலாம். எங்கள் கணக்கெடுப்பில் 172 நகரங்களில் சராசரி விலைவாசி உயர்வு என்பது கடந்த 20 ஆண்டுகளில் நாம் பார்த்திராத அளவில் மிக வலிமையானது. இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in