Published : 02 Dec 2022 05:13 PM
Last Updated : 02 Dec 2022 05:13 PM

‘மெட்ராஸ் ஐ' பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? - மருத்துவரின் ஆலோசனைகள்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் (கன்சங்டிவிடிஸ் - Conjunctivitis) முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டதால், இந்த நோய்க்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருப்போம். காலநிலை மாற்றம் காரணமாக உருமாறும் வைரஸ்கள் பரவலால், சில காலம் அடங்கியிருந்த ‘மெட்ராஸ் ஐ’ திரும்பவும் பரவ வேகமெத்துள்ளது. இதனால் சமீபமாக மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவர் வினீத் ராத்ரா கூறும்போது, “கண்நோய் வந்த ஒருவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு வந்து விடும் என்று சொல்ல முடியாது. கண்கள் சிவத்தல், நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்ணிலிருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதியில் ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளன” என்று தெரிவித்தார். மேலும், ‘மெட்ராஸ் ஐ’ பரவலைத் தடுக்கும் வழிமுறைகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

மருத்துவர் வினீத் ராத்ரா

மெட்ராஸ் ஐ தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்:

  • பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும்.
  • தொற்றால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
  • நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது.
  • குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்.
  • மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • பழைய கான்டாக்ட் லென்ஸ்களை தவிர்த்துவிட்டு மருத்துவரின் அறிவுரை பெற்ற பின்னர் புதியதை பயன்படுத்த வேண்டும்.
  • தாய்ப்பால், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
  • தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • சுயமாக மருத்துவம் செய்ய வேண்டாம், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
  • நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும்.
  • நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் , கருப்பு கண்ணாடி அணிந்துகொள்வது நல்லது.

இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் கண் நோயாகும் என்பதால் சமூகப் பரவலைத் தடுக்க மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கண் சிவந்து போயிருந்தால் அது மழைக்காலத்தில் வரக்கூடிய `மெட்ராஸ் ஐ’ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. கருவிழியில் பிரச்னை, கண் அழுத்தம் உள்ளிட்ட பாதிப்பாகவும் இருக்கலாம். கண்ணில் காயம் பட்டாலும் பிற கண் நோய்களாலும் கண்கள் சிவந்து இருக்கும். சிவப்புக் கண் பின்வரும் கண் நிலைகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். அவை:

  • மூடிய கோண கண் அழுத்த நோய் (angle-closure glaucoma)
  • கண் இமை அழற்சி.( Blepharitis)
  • தீவிரமான பாக்டீரியா தொற்று (Cellulitis)
  • வெண்படல அழற்சி (Conjunctivitis)
  • தொடர்பு லென்ஸ்கள் தொடர்பான கண் தொற்றுகள் (Contact Lens-Related Eye Infections).
  • கருவிழி சிராய்ப்பு (Corneal Abrasion)
  • கருவிழி புண்(Corneal Ulcer)
  • கரோனா வைரஸ் (COVID-19)
  • கண்ணில் தொற்று, எண்டோஃப்தால்மிடிஸ்(Endophthalmitis)
  • கண் ஒவ்வாமை (Eye Allergies)
  • கண் புற்றுநோய் (Eye Lymphoma)
  • கருவிழி பூஞ்சை (Fungal Keratitis)
  • விழி வெண்படல ராட்சத ஒவ்வாமை அழற்சி (Giant Papillary Conjunctivitis)
  • வைரஸ் மற்றும் கண் நோய்கள்(Herpes Keratitis & Herpes Zoster)
  • யுவியாவின் வீக்கம் (Uveitis)
  • பிங்குகுலா மற்றும் முன்தோல் குறுக்கம் (Pinguecula and Pterygium
  • விழித்திரை புற்றுநோய் (Retinoblastoma)
  • விழி வெண்படல இரத்தக்கசிவுகள் (Subconjunctival Hemorrhage)
  • டாக்சோபிளாஸ்மோசிஸ் (Toxoplasmosis
  • கண் இமைகளின் தவறான சீரமைப்பு (Trichiasis)
  • எனவே, கண்கள் சிவப்பாக இருந்தால், அதனால் கண் உறுத்தல், கண்ணீர் வடிதல் மற்றும் கண் வலி இருந்தால் தானாக சுய வைத்தியம் செய்யாமல் அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x