

காரைக்கால்: பசியால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்காலைச் சேர்ந்த 20 வயது இளைஞர், காரைக்காலிலிருந்து இந்திய எல்லைப் பகுதியான வாகா வரை நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் - லூர்துமேரி தம்பதியர் மகன் ஜானி என்ற 20 வயது இளைஞர் ‘காரை சிறகுகள்’ என்ற சமூக நல இயக்கத்தின் உறுப்பினராக உள்ளார். இவர் இந்தியாவில் பசியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்,"பசியை ஒழிப்போம், பாசத்தை அளிப்போம்" என்ற முழக்கத்தை முன்வைத்து, நாடு முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்காலில் இருந்து 3,000 கி.மீ தூரமுள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று (டிச.1) காலை காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து நடைபயணத்தை தொடங்கினார். காரை சிறகுகள் இயக்க நிறுவனர் வெங்கடேஷ் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், அவரின் நண்பர்கள் உள்ளிட்டோர் ஜானிக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கியுள்ள இளைஞர் ஜானி, ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியில், "நாள்தோறும் முடிந்தவரை பசியால் வாடுவோருக்கு உணவு அளித்து வருகிறேன். காரை சிறகுகள் இயக்கத்தின் நண்பர்கள் அவ்வப்போது கூடி நாட்டு நடப்புகள் குறித்து விவாதிப்பதுண்டு. அவ்வாறு விவாதிக்கும்போது ஒரு புள்ளி விவரத்தின்படி பசியால் உயிரிழப்போர் அதிகமாக உள்ள நாடுகளின் எண்ணிகையில் இந்தியா 109-வது இடத்தில் இருப்பது குறித்து பேச்சு வந்தது.
பசியால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், பசியால் வாடுவோருக்கு உணவளிக்கும் எண்ணம் எல்லோருக்கும் ஏற்படவும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே சொன்னால் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் இவ்வாறு நடைபயணம் மேற்கொள்ளும் முடிவு எடுத்தேன். எனது அப்பா வாத நோயாலும், அம்மா இருதய நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு சகோதரி உள்ளார்.
31 நாட்களில் வாகா எல்லையை சென்றடையுடம் வகையில் திட்டமிட்டுள்ளேன். ஒரு நல்ல விஷயத்துக்காக ஒரு மாத காலம் பொறுத்துக் கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு வந்துள்ளேன்" என்று ஜானி கூறினார்.