பன்னாட்டு வியாபார தலம் | கோவை தினம் சிறப்பு

பன்னாட்டு வியாபார தலம் | கோவை தினம் சிறப்பு
Updated on
1 min read

கொங்கு சோழர் காலத்தில் (கிபி 1200-1500) கோவை உண்டானதாக தெரிகிறது. மேடு, பள்ளங்கள் அதிகம் இருந்ததால் மக்கள் குடியேற்றம் வேகமாக நடைபெறவில்லை. எங்க பார்த்தாலும் காடுகள் தான் அதிகம் இருந்தன.

கி.பி 10-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர் ஆட்சி மலரும் வரை கோவை ஒரு மேய்ச்சல் நிலப்பரப்பாகவே இருந்து வந்துள்ளது. இந்த மண்ணின் பூர்வீக குடிமக்களான வேட்டுவர்கள், பூலுவர்கள், பழங்குடிகள் உள்ளிட்டோர் கால்நடை மேய்ப்பதையே முக்கிய பணியாக செய்து கொண்டிருந்தனர். 18-ம் நூற்றாண்டு தொல்லியல் ஆய்வில் பல புதிய செய்திகள் வெளிவந்தன.

மெக்கன்சியின் கள ஆய்வும் இதற்கு பயன்பட்டது. எகிப்தில் செங்கடல் துறைமுக அகழாய்வில் பல புதிய செய்திகள் வெளிவந்தன. கி.மு 44 முதல் கி.பி 6-ம் நூற்றாண்டு வரை கோவையை சுற்றியுள்ள வெள்ளலூர், முட்டம், அன்னூர், சூலூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகள் முக்கிய பன்னாட்டு வியாபார தலங்களாக விளங்கி வந்துள்ளன. மேலை நாட்டினர் கொங்கு நாட்டின் மிளகு, ஏலம், யானை தந்தம், கிராம்பு, பாக்கு, அகில் உள்ளிட்டவற்றை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றுள்ளனர்.

இந்தியாவில் 1,500-க்கும் மேற்பட்ட யவனக்காசுகள் நொய்யல் நதிக்கரையில் மட்டுமே கிடைத்திருப்பது இந்த ஆய்வில் முக்கிய திருப்பமாகும். இதற்கு கொங்கு பெருவழிகள் பெரிதும் உதவி செய்துள்ளன. பாலக்காட்டு கணவாய் ஒரு முக்கிய வழித்தடமாக விளங்கி வந்துள்ளது. 1976-ல் சுண்டைக்காய்முத்தூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் ‘இராசகேசரி பெருவழி’ குறித்த விவரம் எழுதப்பட்டிருந்தது.

முட்டம், பேரூர், வெள்ளலூர், சூலூர், காங்கயம், கரூர், உறையூர் வரை சென்றுள்ளது இராசகேசரி பெருவழி. கொங்கு பெருவழி பேரூர், வெள்ளலூர், சூலூர், இருகூர், அன்னூரை இணைத்தது. கொங்கு குலவள்ளி வீதி என்பது இப்போது உள்ள கோவை -பொள்ளாச்சி சாலையாகும்.

மாமன்னன் கரிகாலன் சிங்காநல்லூரில் வசித்தவர். நொய்யலில் 32 அணைகளை கட்டிவைத்தார். மதுரை நாயக்கர்கள் சுமார் 130 ஆண்டுகள் கோவையை ஆட்சி செய்து வந்துள்ளனர். 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. மாவட்ட நீதிமன்றம் 1806-ல் தாராபுரத்தில் தான் இருந்துள்ளது. 1816-ல் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in