

ஐதர்அலி காலத்தில் (கிபி 1722-1782) கோயமுத்தூரில் கோட்டை வலுவாக இருந்துள்ளது. 1798, 1783, 1790-ம் ஆண்டில் ஆங்கில சிப்பாய்கள் இந்த கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். 1791-ம் ஆண்டில் பெரிய சண்டை நடந்துள்ளது. இந்த கோட்டை ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருப்பதாக கருதி 1792-ம் ஆண்டில் திப்புசுல்தான் அதை இடித்துத் தள்ளினார். மலபாரிலிருந்து இஸ்லாமியர்களை குடிவைத்து கோட்டைமேடு என்று பெயர் தந்ததாக கொங்கு களஞ்சியம் (2005) கூறுகிறது.
பெருவெள்ளம்: 1710-ம் ஆண்டு கோயமுத்தூரில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. பழைய ஆவாரம்பாளையம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையமும் அழிந்து போனது. 1711-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தற்போது உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தை பெரியபாப்பா நாயுடு என்பவர் உருவாக்கினார். இப்போது உள்ள பீளமேடும் அன்றைய தினமே உருவானது.
கோனியம்மன் கோயில் வரலாறு: துடியலூர் செல்லும் வழியில் சங்கனூர் பள்ளம் அருகே பழைய கோனியம்மன் கோயில் இருந்தது. கோயில் சேதமடைந்ததையடுத்து மூலவரான கோனியம்மன் சிலை தற்போது டவுன்ஹாலில் வைக்கப்பட்டது. கோவையில் ஆட்சி செய்த மைசூர் உடையார் அரசர்களால் இக்கோயில் நிறுவப்பட்டது. கோனியம்மன் கோவையின் காவல் தெய்வம்.