Published : 24 Nov 2022 05:19 PM
Last Updated : 24 Nov 2022 05:19 PM

நிரந்தர ஜவுளிக் கேந்திரமாக திகழும் கோவை!

நவ.24: இன்று கோவை தினம்

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. இந்த தொழில் மூலம் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித்தொழிலில் கோவை மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது கோவை. கரிசல் மண், ஆண்டுதோறும் 10 மாதங்கள் 27 டிகிரி செல்சியஸை ஒட்டிய வெப்பநிலை மற்றும் 65 சதவீத ஈரப்பதம்(உலகில் வேறு எங்கும் இல்லை), மின் தேவைக்கு பைகாரா மின்நிலையம் உள்ளிட்டவை கோவை நூற்பாலை தொழிலில் புகழ்பெற்று விளங்க முக்கிய காரணங்களாகும்.

தமிழகத்தில் 2,000 நூற்பாலைகள் உள்ள நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 1,000 நூற்பாலைகள் உள்ளன. நகரப்பகுதிகளில் அமைந்துள்ள சில நூற்பாலைகள் மூடப்பட்ட போதும் புறநகர் பகுதிகளில் பல நூற்பாலைகள் தொடர்ந்து செயல்படுகின்றன. குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 72 லட்சம் ஸ்பிண்டில்கள் உள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 75 லட்சம் ஸ்பிண்டில்கள் உள்ளன.

இந்திய ஜவுளித்தொழிலில் இயந்திரங்கள் தேவையில் 80 சதவீதமும், உதிரி பாகங்களுக்கான தேவையில் 70 சதவீதமும் கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்வது கூடுதல் சிறப்பு. கோவையின் சுற்றுப்புறங்களில் 100 கி.மீ தூரத்துக்குள் நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் தொடரிலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களின் தொழில் வளர்ச்சி கோவையை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அளவுக்கு தொழில்துறையில் கோவை சிறந்து விளங்குகிறது. தொழில்நுட்ப ஜவுளித்தொழிலும் கோவையில் சிட்ரா(தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம்) மற்றும் பிஎஸ்ஜி குழுமம் என இரண்டு இடங்களில் பிரத்யேக கட்டமைப்பு கொண்டு செயல்படுகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.

உலகத்தரத்திலான நூல் உற்பத்தி, கோவை காட்டன், நெகமம் புடவை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் கோவைக்கு உள்ளது. கோவையில் அதிக நூற்பாலைகள் தொடங்க பைகாரா மின்நிலையம் முக்கிய காரணமாகும். கோவையில் உள்ள நூற்பாலை அதிபர்கள் தொழிலாளர்கள் நலனிலும் சமுதாய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றனர்.

குறிப்பாக கல்வி, சுகாதாரம், இயற்கை வளங்கள், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவை பணிகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதுவே தொழில்துறையில் கோவை சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாகும். ஜவுளித்தொழிலில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள போதும், என்றும் நிரந்தர ஜவுளிக் கேந்திரமாக கோவை திகழும் என்பதில் சந்தேகமில்லை.

எருதுகள் துணையுடன் இயங்கிய தொழிற்சாலை: பீளமேட்டில் செயல்பட்டு வந்த ரங்க விலாஸ் ஜின்னிங் தொழிற்சாலையில் மின்சாரம் பயன்பாட்டுக்கு வரும் முன்பு எருதுகளின் துணையுடன் தொழிற்சாலை இயக்கப்பட்டு வந்தது. நாளடைவில் இதன் தொழில்நுட்பம் பைக்காரா மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் காரணமாக பல நூற்பாலைகள் தொடங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x