Last Updated : 23 Nov, 2022 07:56 PM

 

Published : 23 Nov 2022 07:56 PM
Last Updated : 23 Nov 2022 07:56 PM

கார்த்திகை தீபத்துக்கு தயாராகும் 9 விதமான வண்ண விளக்குகள்: புதுச்சேரியில் குவியும் வெளிமாநில ஆர்டர்கள்

புதுச்சேரி: கரோனா காலத்துக்கு பிறகு தற்போது வரும் கார்த்திகை தீபத்தையொட்டி வெளிமாநிலங்களுக்கு 9 விதமான வண்ணங்களில் விளக்குகள் மும்முரமாக தயாராகும் சூழலில் ஆர்டர்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் அதை பூர்த்தி செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் தமிழகம், புதுச்சேரியில் பெண்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வீட்டு வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். வீடுகளில் ஏற்றப்படும் கார்த்திகை திருவிழாவுக்கான அகல்விளக்கும் தயாரிக்கும் பணி புதுச்சேரியில் மும்முரமாக நடந்து வருகிறது.

கார்த்திகைக்காக அகல் விளக்குகள் இம்முறை பல மாடல்களில் தயாராகின்றன. குறிப்பாக ஒத்தவிளக்கு, ஸ்டார் விளக்கு, லட்சுமி விளக்கு, யானை விளக்கு, மூன்றுமுகம் லட்சுமி விநாயகர் விளக்கு, ஐந்து முகம் லட்சுமி விநாயகர் விளக்கு, குத்துவிளக்கு, சுத்துவிளக்கு என மும்முரமாக விளக்குகளை தயாரிக்கின்றனர். கடந்த காலத்தில் ஒத்த விளக்கு டெரகோட்டா, கோல்டு கலரில் மட்டும் கிடைக்கும் இம்முறை விளக்குகளை 9 வண்ணங்களில் வாங்கலம். குறிப்பாக பச்சை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு, ரோஸ் என வண்ணங்களில் விளக்குகள் தயாராகி வருகின்றன.

இதற்கு முக்கியக் காரணம் வெளிமாநிலங்களில் ஏற்பட்டுள்ள அதிக வரவேற்பால் ஆர்டர்கள் புதுச்சேரியில் குவிகிறது. முன்பு சக்கரத்தைவைத்து சுற்றி விளக்குகளை தயாரிப்பதை மாற்றி மோட்டார் மூலம் சுற்றி விரைவாக விளக்குகளை உருவாக்குகிறார்கள். களிமண்ணை எடுத்து விளக்கு உருவாக்கி, அதற்கு டிசைன் செய்து நான்கு மணி நேரம் காயவைத்த பின்பு செங்கல் சூளையில் இரண்டு நாட்கள் வைக்கிறார்கள். அதிலிருந்து சுட்டு எடுக்கப்பட்ட விளக்குகள் வலிமையாக இருக்க பெபிகால் கலந்த கலவையில் முக்கி எடுத்து இரண்டு மணி நேரம் காய வைக்கிறார்கள். அதன்பிறகு 9 வகை வர்ணம் பூசும் பணி தொடங்குகிறது. ஒவ்வொரு விளக்கையும் தனி பாக்கெட்டில் வைத்து நூறு அகல்விளக்கு கொண்ட பாக்ஸ் உருவாக்கி வெளியூருக்கு அனுப்புகிறார்கள்.

அகல் விளக்கு உற்பத்தி செய்யும் கலைஞர்கள் கூறுகையில், "கரோனா காலங்களில் குறைந்த அளவே விளக்கு விற்பனையானது. தற்போது விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கார்த்திகை தீபத்தை கொண்டாட 9 வர்ணங்களில் விளக்குகளைத் தயாரித்து வியாபாரிகளுக்கு வாட்ஸ்அப் அனுப்பினோம்.

சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிதம்பரம், கடலூர், காரைக்கால் வியாபாரிகள் நாளொன்றுக்கு 2 ஆயிரம் அகல்விளக்குகளுக்கு ஆர்டர் தந்தனர். தேதிக்குள் முடித்து விடுவோம். சங்கராபரணி ஆற்று களிமண் எடுத்துதான் செய்கிறோம். அந்த மண்ணுக்கு நல்ல பொம்மைகளை வடிக்க முடியும். மண் பொம்மை செய்யும் போது வெடிக்காது. வளவளப்பாக இருக்கும். காலை முதல் மாலை வரை விளக்கு தயாரிப்பில் ஈடுபடுறோம். ஆர்டர்கள் அதிகமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்ய பணி மும்முரமாக நடக்கிறது.

குறிப்பாக ஐந்து முகம் கொண்ட லட்சுமி விநாயகர் சிலை விளக்கு செய்வது கடினம். 4 நாட்களாவது ஆகும். சென்னைக்கு இவ்விளக்கு அதிகளவில் செல்கிறது. புதுச்சேரியில் மண் எடுக்ககட்டுப்பாடு உள்ளது. அதை தளர்த்தி தந்தால் உதவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x