Published : 21 Nov 2022 05:48 PM
Last Updated : 21 Nov 2022 05:48 PM

FIFA WC 2022 | கண்ணூர் முதல் கத்தார் வரை: கால்பந்தாட்ட ரசிகையின் தன்னந்தனி பயணம்

நஜிரா நவ்ஷத்

ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. அடுத்த சில வாரங்களுக்கு கோல் மழையை பொழிய உள்ளனர் கால்பந்தாட்ட வீரர்கள். இந்திய அணி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனாலும் இந்திய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இந்தத் தொடருக்கு இருந்து வருகிறது. அதிலும் கேரளா, மேற்கு வங்கம், கோவா போன்ற பகுதிகளில் உள்ள ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பதாகைகள் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ரசிகர்களில் ஒருவர்தான் நஜிரா நவ்ஷத். இவர் இந்தத் தொடரை நேரடியாக காணும் வகையில் இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து உலகக் கோப்பை தொடர் நடைபெறும் கத்தார் நாட்டுக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்திற்கென மஹிந்திரா தார் காரில் தன்னந்தனியாக பயணம் செய்துள்ளார். இந்தப் பயணத்தில் அவருக்கு அந்தக் கார்தான் வீடு. இந்தக் காரில் அவர் பசியை ஆற்றிக் கொள்ளும் வகையில் உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த அக்டோபர் 15-ம் தேதி அவரது சொந்த ஊரான கேரள மாநிலத்தின் கண்ணூரில் இருந்து காரில் புறப்பட்டுள்ளார். இந்தப் பயணத்தை கேரள மாநில சாலை போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜு தொடங்கி வைத்துள்ளார்.

கோழிக்கோடு, கொச்சி, கோவை, சேலம், பெங்களூரு, ஹம்பி, புனே, மும்பை வரை சென்ற அவர், அங்கிருந்து ஆகாய மார்க்கமாக ஓமன் சென்றுள்ளார். அவரது கார் கப்பலில் அந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி ஓமனில் இருந்து தனது காரை அவர் எடுக்க உள்ளதாக வீடியோ பதிவு செய்திருந்தார். நாள் ஒன்றுக்கு 600 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணிக்கிறார் அவர். பெரும்பாலும் இரவு நேரங்களில் பயணிக்கவே விருப்பம் என தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 1-ம் தேதி அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் விளையாட உள்ள குரூப் போட்டியை பார்க்க ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“எனது 14-வது வயதில் கால்பந்தாட்டத்தின் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. அதற்கு காரணம் எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள்தான். அவர்கள் அனைவரும் கால்பந்தாட்ட ரசிகர்கள். அவரை பார்த்து வளர்ந்த எனக்கும் அதுவே பேவரைட் விளையாட்டு ஆனது. தற்போது நான் ஓமனில் எனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன்.

ஆனால், என்னுடைய இந்தப் பயணத்தை சொந்த ஊரான கண்ணூரில் உள்ள தலச்சேரியில் இருந்து தொடங்க விரும்பினேன். இதற்கு முன்பும் நெடுந்தூரம் தனியாக பயணித்த அனுபவம் எனக்கு உள்ளது. அந்த நம்பிக்கையில் இந்த பயணம் தொடங்கியது. எனது சாகச பயணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தை தொடங்கிய போது அவரது கணவர்தான் நிதி உதவி செய்துள்ளார். பின்னர் அவரது யூடியூப் சேனல் மற்றும் ஸ்பான்சர்கள் இதற்கு உதவியுள்ளனர். (கடைசியாக அவர் ஓமனில் இருந்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்) இங்கிருந்து ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா வழியாக கத்தார் செல்ல உள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x