சர்க்கரை நோயால் ஏற்பட்ட ஆறாத புண் - கோவை முழங்காலை அகற்றாமல் நோயாளியை காப்பாற்றிய இஎஸ்ஐ மருத்துவர்கள்

சர்க்கரை நோயால் ஏற்பட்ட ஆறாத புண் - கோவை முழங்காலை அகற்றாமல் நோயாளியை காப்பாற்றிய இஎஸ்ஐ மருத்துவர்கள்
Updated on
1 min read

கோவை: ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாததால் ஆறாத புண் ஏற்பட்டு, இடது முழங்காலை அகற்ற வேண்டிய நிலையில் இருந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (42). சர்க்கரை நோய் காரணமாக இவரது இடது காலில் புண் ஏற்பட்டு, தொற்று அதிகமானதால் முழங்காலுக்கு கீழ் வரை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை அணுகினார். அங்கு சிகிச்சைக்கு அதிக செலவாகும் என தெரிவிக்கப்பட்டதால், கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் தற்போது காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு, அவர் நலமுடன் உள்ளார்.

இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் ரவீந்திரன், கண்காணிப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் கூறியதாவது: முழங்காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை இருந்ததால் நோயாளி மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் முதலில் உளவியல் ஆலோசனை அளித்தோம். பின்னர், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இடது காலில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த கெட்டுப்போன சதைப்பகுதிகளை பொது அறுவைசிசிச்சை துறையின் மருத்துவர்கள் மயக்க மருந்து செலுத்தி வெட்டி அகற்றினர். பின்னர், காலில் புண் இருந்தது. சாதாரணமாக அந்த புண் ஆற நீண்ட நாட்கள் ஆகும். எனவே, ‘வேக்கும் அசிஸ்டட் வூண்ட் குளோஷர் தெரபி’ (விஏசி) கருவியை பயன்படுத்தி புண்ணில் இருந்த கசடுகள் உறிஞ்சப்பட்டு, அந்த இடத்தில் மருந்து வைத்து கட்டப்பட்டது.

நடக்கும் நிலைக்கு வந்த நோயாளி: பின்னர், செந்தில்குமாரின் வலது தொடையில் இருந்து தோலை எடுத்து காயம் இருந்த இடத்தில் வைக்கப்பட்டது. கால் பாதத்தில் புண் இருந்ததால் சாதாரண செருப்பு அணிந்து அவரால் நடக்க இயலாது. எனவே, அதற்கென பிரத்யேக காலணியை வழங்கியுள்ளோம். 100 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பியுள்ளார். இன்னும் ஒரு மாதம் கழித்து அவர் அன்றாட பணிகளை சுயமாக மேற்கொள்ளலாம். வேலைக்கு செல்லலாம். ஒரு கால் இல்லாமல், வருவாய் இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதில் இருந்து செந்தில்குமாரை காப்பாற்றியுள்ளோம்.

எனவே, இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையின் அளவை தொடக்கத்தில் இருந்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். செந்தில்குமாருக்கு சிகிச்சை அளித்த, பொது அறுவைசிகிச்சை துறை தலைவர் தமிழ்செல்வன், இணைப் பேராசிரியர்கள் நாராயணமூர்த்தி, முத்துலட்சுமி, துணைப் பேராசிரியர்கள் ராம், பழனிசாமி மற்றும் பயிற்சி மருத்துவர்களின் பணி பாராட்டுக் குரியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in