

சேலம்: சேலத்தில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில்புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: சேலத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் பல்வேறு ஆளுமைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஜனவரியில் உலக புத்தகத் திருவிழா நடத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த புத்தக திருவிழாவை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பபாசி சார்பில் வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார். அதில் குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்திட ரூ.5.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டமான புத்தகப் பூங்கா அமைக்க 6 கிரவுண்ட் நிலத்தை முதல்வர் ஒதுக்கி தந்துள்ளார். தமிழகத்தில் வரும்ஜனவரியில் உலகப் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசும் போது, தமிழகத்தில் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலத்தில் அரசு ஒதுக்கிய ரூ.17.50 லட்சம் நிதியுடன்பல்வேறு கல்வி நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் வழங்கிய நிதிஎன ரூ.1 கோடி மதிப்பீட்டில் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் புத்தகத் திருவிழாவை பார்வை யிடும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது, என்றார்.
புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், ரூ.10 முதல் ரூ.ஆயிரம் வரை விலையிலான புத்தகங்கள், கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வுக்கான வழிகாட்டி புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிற மொழிகளில் இருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள், சிறுவர்களுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் பார்வையற்றவர்கள் படிக்கும் வகையில்பிரெய்லி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி-க்கள்எஸ்.ஆர்.பார்த்திபன், ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புத்தகத் திருவிழா வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 வரை நடைபெறும். தினமும் கருத்தரங்கம், மாணவர் களின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், ரூ.10 முதல் ரூ.ஆயிரம் வரை விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.