Published : 19 Nov 2022 07:34 PM
Last Updated : 19 Nov 2022 07:34 PM

‘மெட்ராஸ் ஐ’ வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை - அலர்ட் குறிப்புகள்

பிரதிநிதித்துவப் படம்

மருத்துவர் பெ.ரங்கநாதன்

தமிழகத்தில் சமீப காலமாக மழை அதிகமாகப் பெய்துவருவதால் சளி, காய்ச்சலுடன் சேர்ந்து மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் மக்களிடையே பரவிவருகிறது. இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா (Conjunctiva) என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. முதன்முதலில் சென்னை எழும்பூர் பிராந்திய கண் மருத்துவமனையில் இது கண்டறியப்பட்டதால், இதனை மெட்ராஸ் ஐ என்று அழைக்கிறோம்.

இந்த நோய் வைரஸ் கிருமியினால் வருவதால் இரண்டு வாரங்களில் எளிதில் சிகிச்சை மூலம் சரியாகும் தன்மையைக் கொண்டிருந்தாலும், இது கருவிழி பாதிப்பை ஏற்படுத்தி கண்ணில் கருவிழியில் சிறுசிறு தழும்புகளை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இதனுடன் சேர்ந்து பாக்டீரியா கிருமி பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதனால் கண் மருத்துவரின் தொடர் சிகிச்சை அவசியம்.

மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

# உங்கள் போர்வை, தலையணை உறை, துண்டு கைக்குட்டை போன்றவற்றைத் தினமும் சுத்தமாகத் துவைத்துப் பயன்படுத்தவும்.
# ஈரமான துண்டை வைத்துத் துடைத்து முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
# குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்
# கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவி அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
# கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
# எக்காரணம் கொண்டும் கண்ணை கைகளால் தொடக் கூடாது. அப்படி கண்ணைத் தொட நினைத்தால் கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டுத் தொட வேண்டும். கண்ணைத் தொட்ட பிறகும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அப்போது மெட்ராஸ் ஐ பாதிப்பு வர வாய்ப்பு குறைவு.
# குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால் குழந்தை மூலம் பல மாணவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது.
# மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
# நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும்.
# பேருந்து, ரயில் பயணம் மேற்கொண்டால் போர்வை, தலையணை எடுத்து சென்று பயன்படுத்தவும்.
# கண்ணில் சிவப்பாக இருந்தாலே மெட்ராஸ் ஐ என்று நினைத்துக்கொண்டு தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று டியூப் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
# தாய்ப்பால், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
# மெட்ராஸ் ஐ நோய் உள்ளவர்கள் தங்களை அணுகினால், கண் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்குமாறு மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் அவர்களிடம் அறிவுரை கூற வேண்டும்.
# இரண்டு கண்ணில் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர் வெதுவெதுப்பான நீரினால் தலைக்குக் குளிக்கலாம்.
# ஒரு கண்ணில் பாதிப்பு உள்ளவர்கள் முகத்தை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம்.
# தனித்திருத்தல், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலம் மெட்ராஸ் ஐ பரவாமல் தடுக்கலாம்.
# இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் கண் நோயாகும் என்பதால் சமூகப் பரவலைத் தடுக்க மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x